மும்பை: கடந்த 2014ல் நடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக, பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதாக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்திருந்தது.
அதன்படி, மராட்டிய சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றது பாஜக. கடந்த அக்டோபர் 31, 2014 ல் பட்நாவிஸ், மும்பையின் வான்கடே அரங்கத்தில் மகாராஷ்டிராவின் முதல் பாஜக முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் எடுத்தார்.
அதற்கு மறுநாள் நவம்பர் 1ம் தேதி பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.71.91 ஆகவும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.61.04 ஆகவும் இருந்தது என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கூறியுள்ளது.
கடந்த 5 வருடங்களில் மும்பையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.90 ஐத் தாண்டியும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.80 ஐத் தாண்டியும் இருந்துள்ளது. கடந்த
அக்டோபர் 4, 2018ல் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.91.34 ஆகவும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.80 ஆகவும் இருந்தது.
விண்ணை எட்டிய எரிபொருள் விலையைக் குறைக்க மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அம்மாநில அரசு எடுத்த சில நடவடிக்கைகளால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.97 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.45 ஆகவும் குறைந்தது. ஆயினும், இந்நிவாரணம் சில நாட்களுக்கே நீடித்தது.
நாட்டின் பொருளாதாரத் தலைநகரில், பெட்ரோல் எப்போதுமே லிட்டருக்கு ரூ. 73க்கு மேலேதான் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மிகக் குறைவான விலையாக, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.95 ஆக இருந்துள்ளது. டீசலைப் பொறுத்தமட்டில், லிட்டருக்கு ரூ.65 தான் மிகக் குறைந்த விலையாகும்.
தற்போது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் அறிவிப்புப்படி, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, முறையே லிட்டருக்கு ரூ.78.88 மற்றும் 69.61 ஆகும்.