சென்னை: ராகுலின் 100 கி.மீ நடைபயணத்திலேயே பா.ஜ.க. ஆட்சி ஆட்டம் கண்டு விட்டது என்றும், பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஒற்றுமை பயணம் குறித்து குற்றம் சாட்டுபவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து கேள்வி எழுப்புபவர்கள் மகாத்மா காந்தியை படுகொலை செய்தவர்கள். நாதுராம் கோட்சேவின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் தான் இத்தகைய கேள்விகளை கேட்கிறார்கள்.

சுதந்திரத்திற்கு பிறகு 52 ஆண்டுகளாக மூவர்ண தேசியக் கொடியை ஏற்றாதவர்கள் தான் இந்த கேள்வியை எழுப்புகிறார்கள். எம்.எம். கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷ் கொலைகளில் தொடர்புடையவர்கள் தான் இந்த கேள்வியை கேட்கிறார்கள்.

தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பிளவுபட்ட மக்களை ஒன்று படுத்துகிறது. மக்களோடு மக்களாக பயணிக்கிறார். மக்கள் துன்பத்தை நேரிடையாக அறிகிறார். அவர் எழுப்புகிற கேள்விகளுக்கு பதில் கூற தயாராக இல்லாத பா.ஜ.க., திசைதிருப்புகிற அரசியலை செய்கிறது.

ஆனால், அதில் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது. தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கிற இந்திய ஒற்றுமை பயணத்திற்கு பின்னாலே கன்னியாகுமரியில் தொடங்கி இந்திய மக்கள் பேராதரவு வழங்கி ஆதரித்து வருகிறார்கள். மக்கள் எழுச்சியை சகித்துக் கொள்ளாத பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது.

ராகுல்காந்தியின் 100 கி.மீ. பயணத்திலேயே பா.ஜ.க.வின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. இதுவே தலைவர் ராகுல் காந்திக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியின் தொடக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.