திருவள்ளூர்: பாஜகவினரின் வேல்யாத்திரையை தடுத்து நிறுத்தியதால், பாஜக நிர்வாகி எஸ்.பி.யை தாக்கினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாஜக நிர்வாகியை காவல்துறையினர் இன்று அதிகாலையில் கைது செய்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த சம்பவம் சக காவல்துறை அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றிவேல் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கடந்த 6ந்தேதி திட்டமிட்டபடி யாத்திரை தொடங்கியது. ஆனால், யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க மறுத்ததால், தடையை மீறி வெற்றிவேல் யாத்திரை தொடங்கியது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தனது இல்லத்தில் இருந்து வேலுடன் திருத்தணிக்கு புறப்பட்டு சென்று, அங்கு முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, வேல் யாத்திரையை தொடங்கினார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவருடன் பங்கேற்ற அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டங்கள் நடத்தினர். தனித்தனியாக வேல்யாத்தையை நடத்தினர். அதன்படி திருவள்ளூரிலும்பாஜக நிர்வாகி செல்வமணி தலைமையில் வேல்யாத்திரை நடைபெற்றது. இதை திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது, பாஜக நிர்வாகிக்கும் , எஸ்.பி.க்கும் இடையே மோதல் ஏற்பட்டு, எஸ்.பி. தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து பாஜக நிர்வாகி செல்வமணி உட்பட 13 பேர் மீது திருத்தணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாஜக நிர்வாகி செல்வமணி இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டு அடுத்த சில மணி நேரத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இது காவல்துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.