ராய்ச்சூர்
பாஜக மூத்த தலைவர் விஜய் சங்கேஷ்வர் கூறியபடி ஆக்சிஜனுக்கு பதில் எலுமிச்சை சிகிச்சை எடுத்தவர் உயிர் இழந்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை பரவலில் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளின் அதிகரிப்புக்கு ஏற்றபடி ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் அவல நிலை ஏற்படுகிறது. இதையொட்டி அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் ஆக்சிஜன் பற்றாக்குறையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான விஜய் சங்கேஷ்வர் என்பவர் ஒரு புதிய அறிவுரையைத் தெரிவித்துள்ளார். அவர், ”கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றை மூக்கில் விட்டுக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்படுவதையும் தடுக்கலாம்” என தெரிவித்தார்.
ராய்ச்சூரில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இங்கு ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிக அளவில் உள்ளது. இங்குள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியராக பசவராஜ் மாலிபாடில் என்னும் 45 வயதானவர் பணி புரிந்து வருகிறார். அவர் விஜய் சங்கேஷ்வர் கூறியபடி எலுமிச்சை சாற்றை மூக்கில் செலுத்தி உள்ளார். அதன் பிறகு அவர் இருமுறை வாந்தி எடுத்துள்ளார்.
அவர் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இதையொட்டி அங்குள்ள மக்கள் விஜய் சங்கேஷ்வர் மீது கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர் இது குறித்து உள்ளூர் வாசி ஒருவர், “பொறுப்பான பதவியில் இருந்த ஒருவர் இவ்வாறு தவறான தகவல் அளித்து அதனால் ஒருவர் மரணம் அடைந்தது கொலை செய்ததற்குச் சமமாகும்” எனக் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.