டேராடூன்

கொரோனா அதிகரிப்பால் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையை உத்தரகாண்ட் அரசு ஒத்தி வைத்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு நாடெங்கும் கடுமையாக உள்ளது.  இதற்கு முக்கிய காரணமாகத் தேர்தல் பொதுக் கூட்டங்கள் மற்றும் கும்பமேளா ஆகியவை காரணமாகச் சொல்லப்படுகிறது.   இந்தியாவில் தற்போது தினசரி பாதிப்பு 3.8 லட்சத்தை தாண்டி உள்ளது.   இதைத் தடுக்க மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த காலகட்டத்தில் சார்தாம் யாத்திரையை அரசு நடத்துவது வழக்கமாகும்.   சார்தாம் என்பது கேதார்நாத், பத்ரிநாத் , யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய நான்கு புண்ணிய தலங்களைக் குறிக்கும்.   இந்த வருடத்துக்கான மே மாதம் 14 அன்று தொடங்க உள்ளதாக அரசு அறிவித்தது.

நாடெங்கும் கொரோனா பரவலை முன்னிட்டு கூட்டம் கூடுவதைத் தடுக்க  அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.  மேலும் திரை அரங்குகள், வணிக வளாகங்கள், முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட இடங்களும் பல மாநிலங்களில் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சார்தாம் யாத்திரை நடத்த ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏற்கனவே கொரோனா பரவல் அதிகரிப்பால் கும்பமேளா விழாவை உத்தரகாண்ட் அரசு இடையில் நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.   இதே நிலை சார்தாம் யாத்திரைக்கும், ஏற்படலாம் என அச்சம் எழுந்தது.  இதையொட்டி உத்தரகாண்ட் அரசு சார்தாம் யாத்திரை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அம்மாநில முதல்வர் திரத் சிங் ராவத், “சார்தாம் யாத்திரைக்காக கோவில்கள் திறக்கப்படுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  உள்ளூர் வாசிகளும் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  இந்த நான்கு கோவில்களின் அர்ச்சகர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு,   பக்தியை விடப் பாதுகாப்பு முக்கியம்” என அறிவித்துள்ளார்,