டில்லி:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் ஆதரவு கோரி வரும் நிலையில், தேசிய கட்சியான பாஜக இதுவரை தேர்தல் அறிக்கை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் வரும் 8ந்தேதி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட இருப்பதாக டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், ஏழைகளுக்கு குடைந்த பட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம்,  அரசு துறையில் காலியாக உள்ள 22 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், விவசாய கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அதில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மிஞ்சும் வகையில்  வேலைவாய்ப்புக்கான தனி அமைச்சகம், 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், வலிமையான இந்தியா போன்ற அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவும்,  அயோத்தியில்ராமர் கோவிலை கட்டுவது, கங்கையுடன் நாட்டின் முக்கிய நதிகளை இணைப்பது போன்ற திட்டங்களும் இடம்பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளதற்கு போட்டியாக பல்வேறு அறிவிப்புகள் குறித்தம் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று நம்பப்படுகிறது.

தற்போது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்து விட்டதாகவும் வரும் 8ந்தேதி வெளியாகும் வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.