புதுடெல்லி:

பாஜகவுக்கு தலித் தலைவர்கள் தேவையில்லை, தலித் வாக்குகள் தான் தேவை என உதித் ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு வடமேற்கு டெல்லியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உதித் ராஜ்.இம்முறை அவருக்கு பாஜக சீட் வழங்கவில்லை. இதனையடுத்து அவர் காங்கிரஸில் சேர்ந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசும்போது, வாய் மூடி, காதுகளை பொத்திக் கொண்டு இருந்தால் மட்டுமே பாஜகவில் எந்த பதவியையும் அடையலாம்.கட்சியில் குரல் கொடுக்காததால், ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி பதவியை பெற்றார்.

ஜனாதிபதியை நான் விமர்சிக்கவில்லை. பாஜகவில் தலித்களின் நிலை இதுதான். கடந்த 2014-ம் ஆண்டு ராம் நாத் கோவிந்த் என் வீட்டுக்கு வந்தார். தனது பயோடேட்டாவை கொடுத்து, கட்சிப் பதவிக்கு சிபாரிசு செய்யச் சொன்னார்.நானும் சிபாரிசு செய்தேன்.

கவர்னராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் ஜனாதிபதியானார்.பாஜகவுக்கு தலித் தலைவர்கள் தேவையில்லை. தலித் வாக்குகள் மட்டும்தான் அவர்களுக்கு தேவை. வாய் மூடி மவுனமாக இருந்தால் எனக்கு பிரதமர் பதவியைக் கூட தருவார்கள்.

பாஜகவும், ஆர்எஸ்எஸும் தலித்களுக்கு ஆபத்தானவர்கள்  என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் முகேஷ் பாரீக், உதித் ராஜை எம்பியாகவும், தலைவராகவும் ஆக்கியது பாஜக தான்.

அவ்வாறு இவ்வாறு பேசியது துரதிஷ்டமானது.அனைத்து சாதிகளையும் பாஜக அரவணைத்துச் செல்கிறது. சீத்தாராம் கேசரியையும், ஜெகஜீவன் ராமையும் காங்கிரஸ் கட்சி எப்படி நடத்தியது என்பதை உதித் ராஜ் தெரிந்து கொண்டால் நல்லது என்றார்.