சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக, பாஜக, தேமுதிக போன்ற கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைமை அதிருப்தியில் இருப்பதாகவும், பாஜக சார்பில், நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் முடிவு எடுக்கப்படாத நிலையே தொடர்கிறது. இரு கட்சிகளும் பாமகவுக்கு இணையாக தொகுதிகளை கேட்டு முரண்டு பிடிப்பதால், அதிமுக தலைமை செய்வதறியாக திகைத்து வருகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான காலஅவகாசம் குறைவாக இருப்பதால், கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, தமிழ்மாநில காங்கிரஸ், முக்குலத்தோர் புலிப்படை என சில கட்சிகள் உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பேசப்பட்டு வருகிறது.
பாமகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கூட்டணி ஏற்பட்டு, 23 தொகுதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து பாஜக, தேமுதிக தலைமையிடம் பேசப்பட்டு வருகிறது.
பாஜக அதிமுக தலைமையிடம் அதிக தொகுதிகள் கேட்டு பல மாதங்களே மிரட்டி வருகிறது. அதுமட்டுமின்றி, முதல்வர் வேட்பாளரை நாங்கள்தான் முடிவு செய்வோம் என பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். இதனால், அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுவது குறித்து கேள்வி எழுந்தது. அதைத்தொடர்ந்து, எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை ஒப்புக்கொண்ட பாஜக, இந்த தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்றும், அதற்காக அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
வர இருக்கிற சட்டமன்ற தேர்தலில் திமுக மட்டும் சுமார் 180 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அதிமுகவுக்கு அதற்கு இணையான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 160 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் செய்துள்ளது.
இதன் காரணமாக, மீதமுள்ள தொகுதிகளைத்தான் கூட்டணி கட்சிகளுக்கு பிரிந்துகொடுக்கும் பணியில் அதிமுக தலைமை ஈடுபட்டு வருகிறது. பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு அதிகபட்சமாக 20 தொகுதிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 12 தொகுதிகள் மட்டுமேஒதுக்க முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது தேமுதிகவிற்கு 12 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அதை தேமுதிக ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனதே தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தேமுதிகவுக்கு 41 சீட் ஒதுக்க வேண்டும் இல்லையில், 3வது அணி அமைப்போம் என்று அதிமுகவுக்கு மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அதிமுக தலைமை அதை கண்டுகொள்ளாமல் வெறும் 12 இடங்களை மட்டுமே தர முடியும் என்று கூறியது, தேமுதிக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறைந்த பட்சம் 20 தொகுதிகளாக ஒதுக்குங்கள் என கோரப்பட்டதாகவும், ஆனால், அதிமுக தலைமை அதற்கு ஒப்புக்கொள்ள வில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து விலகலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையில், பாஜக தரப்பில் இருந்து, அதிமுக தலைமையில் மேலும் தொகுதிகளை கேட்கும் வகையில், புதுவைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று தங்கியிருந்தார். அப்போது அவரை இரவு 10.30 மணி அளவில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சந்தித்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் தற்போதைய அரசியல் நிலவரம், சசிகலாவின் அரசியல் பிரவேச அறிவிப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், குறைந்த பட்சம் பாமகவுக்கு கொடுத்த அளவாது தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியல் அளிக்கப்படும். அதை மறுக்காமல் கொடுக்க வேண்டும் என் அமித் ஷா வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
பாஜகவின் தொகுதி பட்டியிலில் இடம்பெற்றுள்ள தொகுதிகளால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக கொடுத்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள தொகுதிகள் அனைத்தும், ஏற்கனவே அதிமுகவின் கோட்டையாக இருப்பதால், அதை விட்டுக்கொடுக்க அதிமுக யோசித்து வருகிறது.
இதன் காரணமாக அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் இரண்டும் முரண்டு பிடிப்பதால் அதிமுக தலைமையும் தலையை பிய்ச்சிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.