சிம்லா: இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அங்கு தோல்வியை சந்தித்த ஆளும் பாஜக அரசின் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 35 இடங்களை பாஜக கைப்பற்றத் தவறியதால், முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற்றது. இந்த வாக்குகள் கடந்த ஒரு மாதமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு  இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள தொகுதிகளில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில்,   39 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர் ஆதரவு தேவைப்படும் நிலையில்,  காங்கிரஸ் கட்சி 39 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றுள்ளதால், ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக 25 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் 18 இடங்களில் மட்டும் இதுவரை வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து  மாநில பாஜக முதல்வர் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த அவர், பதவியில் இல்லாவிட்டாலும் மக்களின்   மேம்பாட்டிற்காக உழைப்பதை நிறுத்த மாட்டேன் என கூறினார்.

மேலும், மாநிலத்தில்  பாஜக தோல்வி அடைந்துள்ளது தொடர்பாக பகுப்பாய்வு செய்ய வேண்டி உள்ளது. சில பிரச்சனைகள் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுபற்றி விளக்கம் கேட்டு மேலிடம் அழைத்தால் டெல்லி செல்வேன் என்றும் ஜெய்ராம் தாக்கூர் கூறினார்.