டெல்லி: போலீஸ், வழக்குகள் மூலம் என்னை பாஜக  மிரட்ட முடியாது என்று ராகுல்காந்தி பேசினார். வயநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தன்னிடம் காவல்துறை நடத்திய விசாரணைக்கு பதில் அளிக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது.
இந்திய ஒற்றுமை யாத்திரையில் ‘பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்’ என்று பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி யிடம், அதுகுறித்து விசாரிக்க டெல்லி போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர்.  ஆனால், அவரை உள்ளே விட காங்கிரசார் மறுத்த நிலையில் சில மணி நேரத்திற்கு பிறகே காவல்துறையினர் உள்ளே அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக ராகுல்,  ‘பாரத் ஜோடோ யாத்திரை’ நடத்தியபோது, காஷ்மீரில்  அவரது யாத்திரை நிறைவுபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 30-ம் தேதி  ஸ்ரீரீநகரில் செய்தியளார்களிடம்  பேசிய ராகுல், “நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அதிகரித்திருக்கிறது. ஊடகங்கள் இதைப் பற்றி பேசுவதே இல்லை. நான் யாத்திரை மேற்கொள்ளும்போது என்னைச் சந்தித்த பெண்கள் பலர், தாங்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து அழுகையுடன் கூறினர். நான் அவர்களிடம், காவல்துறையினரிடம் சென்று புகார் கொடுக்கும்படி கூறினேன். ஆனால், அவர்களோ `தாங்கள் காவல்துறைக்குச் சென்றால் பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும், திருமணம் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படும் எனக்கூறி, என்னையும் காவல்துறையிடம் சொல்லவேண்டாம் எனத் தெரிவித்தனர்” எனக் கூறினார்.
இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விளக்கம் அளிக்கும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால், அவர் விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து, டெல்லி சட்டம்ஒழுங்கு பிரிவு சிறப்பு போலீஸ் ஆணையர் சாகர் பிரீத் ஹூடா தலைமையிலான போலீஸார், ராகுல் வீட்டுக்கு  சென்றனர்.  டெல்லி துக்ளக் லேன் பகுதியில் உள்ள ராகுல் காந்தியின் 12-ம் எண் வீட்டுக்குப் போலீஸார் சென்றனர். ‘‘நாட்டில் பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக ராகுல் பேசியுள்ளார். அதுதொடர்பான விவரங் களை காவல் துறைக்கு அவர் அளித்தால்தான் பாதிக்கப்பட்டவர்களை அறிந்து அவர் களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும்’’ என்று போலீஸார் தெரி வித்தனர்.

இதுகுறித்து  கூறிய டெல்லி காவல்ஆணையர் சாகர்பிரீத், ராகுல் காந்தியை சந்தித்து அவர் பேசியது தொடர்பான விவரங்களை கேட்டோம். அவரும் பாத யாத்திரையின் போது பேச யது தொடர்பான தேவையான விவரங்களை அளிப்பதாக கூற யிருக்கிறார். அதற்கு சற்று கால அவகாசம் கேட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக நாங்கள் அளித்த நோட்டீஸையும் ராகுல் காந்தியின் அலுவலகத்தினர் பெற்றுக் கொண்டனர். ராகுல் காந்தியிடம் இருந்து விவரங்கள் வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுப்போம் என்று கூறினார்.

ராகுல் காந்தி வீட்டுக்கு போலீஸார் சென்றதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி கேரள மாநிலம் வயநாட்டில் அவரது எம்பி தொகுதிக்கு உட்பட்ட பல குடும்பங்களுக்கு புதியதாக கட்டிய வீட்டின் சாவியை வழங்கும் விழாவில் ராகுல்காந்தி பேசும்போது, நான் போலீசாரை கண்டு சிறிதும்  பயப்படவில்லை. நான் ஏன் பயப்படவில்லை என்பதுதான் அவர்களின் பிரச்னை. பிரதமர், பா.ஜ, ஆர்எஸ்எஸ், காவல்துறையை  கண்டு பலர் பயப்படலாம். ஆனால் நான் இல்லை. காரணம் நான் உண்மையை நம்புகிறேன். நான் எத்தனை முறை தாக்கப்படுகிறேன், எத்தனை முறை என் வீட்டிற்கு போலீசார் அனுப்பப்படுகிறார்கள் அல்லது என் மீது எத்தனை வழக்குகள் உள்ளன என்பது முக்கியமல்ல. நான் எப்போதும் உண்மைக்காக நிற்கிறேன். அதுதான் நான்.

இவ்வாறு அவர் பேசினார்.