புதுடெல்லி: இந்தியளவில் கடந்த மாதத்தில் மட்டும், முகநூலில் வெளியிடப்பட்ட அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு, சுமார் ரூ.4 கோடிக்கும் மேலாக செலவழிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவாளர்களால் செலவிடப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா ஆதரவு பக்கமான ‘பாரத் கி மான் கி பாத்’ மட்டுமே, அரசியல் விளம்பரங்களுக்காக ரூ.1 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதர பிராந்திய கட்சிகள் சார்பில், அரசியல் தொடர்பான முகநூல் விளம்பரத்திற்காக 20 லட்சங்களும், காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவாளர்களால் 10 லட்சங்களும், அதேகாலகட்டத்தில் செலவிடப்பட்டுள்ளன.

பிராந்தியக் கட்சிகளைப் பொறுத்தவரை, ஒடிசாவின் பிஜு ஜனதா தள், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை, சமூகவலைதள அரசியல் விளம்பரங்களுக்காக அதிகம் செலவு செய்யும் கட்சிகளாக மாறிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் விளம்பரங்கள் அளிக்கப்படுகையில், வெளிப்படைத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டி, சம்பந்தப்பட்டவர்களின் தெளிவான விபரங்கள் முகநூல் நிர்வாகம் சார்பில் கேட்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி