சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் பாஜக நிர்வாகி அகோரம் என்பவரின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது

பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது. மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இந்த ஆதீனத்தின் 27 ஆவது தலைமை மடாதிபதியாக இருந்து வருகிறார். ஆதினத் தலைவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி சிலர் மிரட்டல் விடுத்து வந்தனர்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 4 பேரைக் கைது செய்த காவல்துறையினர், பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் என்பவரையும் கைது செய்தனர். தமக்கு ஜாமீன் கேட்டு அகோரம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்தது.

மீண்டும் ஜாமீன் கேட்டு அகோரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அகோரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அகோரம் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும், 45 நாட்களுக்கும் மேல் சிறையில் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

காவல்துறை தரப்பில், இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் இன்னும் தலைமறைவாக இருப்பதால், அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே அகோரத்திற்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இவ்விரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு அகோரத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

[youtube-feed feed=1]