சிர்சா, கர்னாடகா
நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துக் கொண்ட ஒரு நிகழ்வின் அரங்கை கோமியம் கொண்டு பாஜக இளைஞர் அணியினர் சுத்தம் செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜக வை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் மத்திய அரசின் அமைச்சர்களையும், கர்நாடகா பாஜகவின் நடவடிக்கையையும் பற்றி அவர் கூறும் கருத்துக்கள் கடும் சர்ச்சையை உருவாக்கி வருகிறது அவ்வகையில் சமீபத்தில் இடது சாரி அமைப்பினர் நடத்திய நிகழ்வு ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது அவர் உத்தர கன்னடா தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஆனந்த் குமார் ஹெக்டே வை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரகாஷ் ராஜின் இந்த கருத்து மீண்டும் பாஜகவினரிடையே சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. இந்த நிகழ்வு கர்னாடகா மாநிலம் சிர்சாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடை பெற்றுள்ளது. கடந்த பொங்கல் அன்று அந்த மண்டபத்துக்கு பாஜக இளைஞர் அணியான யுவ கேந்திராவை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். அவர்கள் பிரகாஷ்ராஜ் அமர்ந்திருந்த அந்த மண்டபத்தின் அரங்கை நன்கு கழுவி விட்டு அதன் பிறகு அதன் மேல் கோமியத்தை தெளித்துள்ளனர்.
இதை கேள்விப்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜ், “பாஜக தொண்டர்கள் சிர்சா நகரில் உள்ள நான் அமர்ந்த அரங்கை சுத்தம் செய்து கோமியம் தெளித்து புனிதப் படுத்தி உள்ளனர். நான் எங்கு சென்றாலும் இதே சுத்திகரிப்பை நீங்கள் செய்வீர்களா” என ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.