கர்தலா

திரிபுராவில் பாஜக தொண்டர்களால் ரஷ்ய தலைவர் லெனின் சிலை உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 59 இடங்களுக்கு வாக்களிப்பு நடைபெற்றது.   ஒரு தொகுதியில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்டது.    தேர்தலில் பாஜக வும் அதன் கூட்டணி கட்சியான திரிபுரா மக்கள் முன்னேற்றக் கட்சியும் சேர்ந்து 43 இடங்களிலும்,  கம்யூனிஸ்ட் 16 இடங்களிலும் வென்றன.

இதன் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.    கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக் காலத்தில் ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவரான லெனினுக்கு  அகர்தலாவை அடுத்துள்ள பெலோனியா நகரில் சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.    அந்த சிலையை தேர்தல் வெற்றிக்குப் பின் பாஜக தொண்டர்கள் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு இடித்து நொறுக்கி உள்ளனர்.

 

இந்த சிலை உடைப்பு புகைப்படத்தை பாஜக காரியதரிசி ராம் மாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்திருந்தார்.   பதிவில் அவர் “மக்கள் லெனின் சிலையை அடித்து நொறுக்கி விட்டனர்.  இது ரஷ்யாவில் இல்லை, திரிபுராவில்”  என குறிப்பிட்டுள்ளார்.    ஆனால் அந்த டிவிட் அவராலேயே தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திரிபுரா ஆளுநர் தத்கதா ராய்  பாஜகவுக்கு ஆதரவாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.   அவர் தனது பதிவில். “ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட அரசு செய்யாததை மற்றொரு ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்கிறது.   அல்லது தலைகீழாக கொள்ளலாம்”  எனப் பதிந்துள்ளார்.