சென்னை,
திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மு.க.ஸ்டாலின் 65 பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து அண்ணா சதுக்கம் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அண்ணா அறிவாலயம் வந்து கட்சியினரின் வாழ்த்துக்களை பெற்றார்.
இந்த ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து கூற வரும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தனக்கு புத்தகங்களை மட்டும் பரிசாகக் கொடுங்கள் என கடந்த சில நாள்களுக்கு முன் ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து ஸ்டாலினுக்கு பிறந்தநாள் கூற வந்தவர்கள் பல்வேறு புத்தகங்களை பரிசாக கொடுத்தனர்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
புத்தகங்களைப் பரிசளிப்பீர் என்றதை ஏற்று கழகத்தினர் கைகளில் புத்தகங்களை ஏந்தி நின்ற காட்சி ‘அறிவாலயம்’ என சொல்லின் அருஞ்சொற்பொருள் ஆனது.
பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டுள்ள 10,000க்கும் மேலான புத்தகங்களில் எனது தேவை போக,மாணவர்களுக்கான எனது பரிசாக பல்வேறு நூலகங்களில் வைக்க பிரித்து வழங்கும் பணி தொடங்கியிருக்கிறது என்று கூறி உள்ளார்.
பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றியையும் தெரிவித்து உள்ளார்.
புத்தகங்களைப் பரிசளிப்பீர் என்றதை ஏற்று கழகத்தினர் கைகளில் புத்தகங்களை ஏந்தி நின்ற காட்சி ‘அறிவாலயம்’ என சொல்லின் அருஞ்சொற்பொருள் ஆனது. pic.twitter.com/FOHOlYuVq1
— M.K.Stalin (@mkstalin) March 2, 2017