திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் பரவும் பறவை காய்ச்சல்- ஷிகெல்லா வைரஸ் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு 20ஆயிரம்  கோழிகள் மற்றும் வாத்துக்களை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலம் கோழிகோட்டில் மேலும் இருவருக்கு ஷிகெல்லா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இந்த ஷிகெல்லா வைரஸ் அசுத்தமான நீர் மற்றும் உணவால் பரவும் தன்மை கொண்டது. கேரளாவின் காரச்சேரி பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுவனுக்கு அண்மையில் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனை யடுத்து சிறுவனுடன் தொடர்பில் இருந்த பலருக்கும் சோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் இரண்டு பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொற்று பரவி வருவதால், அங்கு நோய்த்தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள சில பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்துக்களுக்கு ஏவியன் புளூ எனப்படும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த வாரம் 1,500 வாத்துகள் திடீரென இறந்துள்ளன.  உடனடியாக அந்த பண்ணைகளில் சுகாதார துறையினர் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் நோய் பாதிப்புக்கு ஆளான பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள தேசிய ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த பரிசோதனையில் வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது.

இதையடுத்து,  ஆலப்புழா மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா தலைமையில் சுகாதார துறை அதிகாரிகளின் அவசர கூட்டம் நடைபெற்றது.  இதில், அந்த பகுதியின் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு அளவில் வீடுகள் மற்றும் பண்கைகளில் வளர்க்கப்படும், வாத்துக்களை  உடனடியாக கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அதன்படி சுமார் 20,471 வாத்துக்கள், கோழிகள் கொல்லப்பட உள்ளன. இதற்கான நடவடிக்கைகளை ஆலப்புழா மாவட்ட நிர்வாகமும், ஹரிபாடு பேரூராட்சியும் மேற்கொண்டுள்ளன.

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கேரளாவில் பொது சுகாதார நடைமுறைகள், மேலாண் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பறவை காய்ச்சல் பரவலை எதிர்கொள்வதற்கான ஒழுங்குமுறைகள் உள்ளிட்ட விசயங்களில் மாநில சுகாதார துறைக்கு உதவியாக இந்த குழு செயல்படும். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டதால், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழிப் பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.