சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் முறையாக பணிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்கள் அனைவரும் இன்றுமுதல் பணிக்கு வந்ததை உறுதி செய்ய பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் பல சங்கத்தை சேர்ந்தவர்கள், பணிக்கு வராமலே கையெழுத்திட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. அதுவும் ஆட்சிகள் மாறும்போருது காட்சிகள் மாறுவதுபோல, ஆளும் கட்சியின் தொழிற்சங்கத்தினர், பணிக்கு வந்ததுபோல கையெழுத்திட்டு விட்டு வெளியேறி விடுகின்றனர். இதனால், சில நேரங்களில் பேருந்துகளை இயக்க போதுமான ஊழியர்கள் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் பயோ மெட்ரிக் வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, முதல்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று முதல் கட்டாயமாக பயோமெட்ரிக் மூலம் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்களின் வருகையை பயோமெட்ரிக் மூலம் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி தெரிவிக்கப்பட்டது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகம், அனைத்து பணிமனைகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் பயோமெட்ரிக் மூலமாகவே வருகையை பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, இன்று (திங்கட்கிழமை) முதல் பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.