சென்னை: தலைமைச்செயலக வரலாற்றில் முதல்முறையாக தலைமைச்செயலக  ஊழியர்களின் வருகை பதிவோடு பயோமெட்ரிக் முறையில் செயல் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஜூன் 1 முதல்  தலைமை செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக், அல்லது முக அங்கீகார அடிப்படையில் வருகை பதிவு செய்யப்படும் என்ற புதிய விதி அமல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது முதல் சட்டசபை நிகழ்வுகள்  நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து மற்ற அமர்வுகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன தொடர்ச்சியாக, அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு செயல்படுத்த உத்தரவிடப்பட்டள்ளது. அதன்படி  தலைமைச் செயலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்கள்,  பள்ளி, கல்லூரிகளிலும்,   பயோமெட்ரிக், அல்லது முக அங்கீகார அடிப்படையில் வருகை பதிவு செய்யப்படும் என அறிவிக்கபபட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தலைமை செயலக அலுவலகத்தில்,  முதற்கட்டமாக ஜூன் 1ந்தேதி முதல்  மனிதவள மேலாண்மைத் துறையில்  பயோமெட்ரிக் நடைமுறை அமலுக்கு  வருகிறது.  பின்னர் படிப்படியாக மற்ற துறைகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1  திங்கட்கிழமை  முதல் அனைத்து அதிகாரிகளும் பணியாளர்களும் பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார முறை மூலம் தங்கள் வருகையை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜூன் 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

அனைத்து பணியாளர்களும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவதோடு, பயோமெட்ரிக் முறையிலும் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.

பணியில் இருக்கும்போது அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும் என துறை உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த முறை ஏற்கனவே சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், சில ஊழியர்கள் தெரிவித்த ஆட்சேபனைகள் மற்றும் கவலைகள் காரணமாக, இதன் அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த முறை முழுமையாக அமலுக்கு வர உள்ளது.

இதற்கிடையில், தலைமைச்செயலகத்தின் மற்ற துறைகளும் வருகைப்பதிவு விதிகளைக் கடுமையாக்கியுள்ளன: உணவு மற்றும் கூட்டுறவுத் துறையில், பணியாளர்கள் அலுவலக நேரத்தைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஊழியர்கள் காலை 9.50 மணிக்கும், அலுவலக உதவியாளர்கள் காலை 9.30 மணிக்கும் பணிக்கு வர வேண்டும் என்று அண்மையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]