புதுடெல்லி:
அனைத்து வகையான தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்ய புதிய மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.
குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் நாணயம் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், புதிய சட்டம் மூலம் இந்தியாவின் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கும் தடை விதிக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்திற்கான கட்டமைப்பை ரிசர்வ் வங்கி உருவாக்கவுள்ளது. ரிசர்வ் வங்கி மூலம் புதிய கிரிப்டோகரன்சியை வழங்குவதற்கான புதிய சட்ட மசோதா வழிவகை செய்யும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவுக்கு கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை 2021 சட்ட மசோதா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நவம்பர் 29 தொடங்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப் படவுள்ள மசோதாக்கள் பட்டியலில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.