கர்நாடகா மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்தவர் பசவராஜ் அமரகோல், ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் அரசுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்களை வினியோகம் செய்து வருகிறார்.

கடந்த 2020 ம் ஆண்டு சிக்மங்களூர் மாவட்டத்திற்கு உட்பட்ட முடிகேரி மற்றும் கடூர் தாலுகாவில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு கொரோனா உபகரணங்களை சப்ளை செய்யும் ஒப்பந்தம் பெற்றிருந்தார்.

பசவராஜ்

இதன்மூலம் முடிகேரி தாலுகாவில் ரூ. 27 லட்சம் மற்றும் கடூர் தாலுகாவில் ரூ. 85 லட்சம் பெறுமானமுள்ள உபகரணங்களை வழங்கி இருக்கிறார்.

சுமார் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு உபகரணங்கள் வழங்கிய நிலையில் இதுவரை அதற்கான பணம் இவருக்கு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், அமைச்சர், முதலமைச்சர், ஆளுநர் மற்றும் பிரதமர் அலுவலகம் என்று பலரிடம் முறையிட்டும் இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை துட்டு வந்தபாடில்லை.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பசவராஜ் குடியரசு தலைவர் முர்மு-வுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இரண்டு ஆண்டுகளாகியும் கர்நாடக அரசிடம் இருந்து தனக்கு வரவேண்டிய பணம் வரவில்லை என்றும் இதனை விடுவிக்க அதிகாரிகள் தன்னிடம் 40 சதம் கமிஷன் கேட்பதாக குறிப்பிட்டுள்ளார்.

உபகரணங்களுக்குத் தேவையான மூலப் பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் தன்னை நெருக்குதலுக்கு உள்ளாக்குவதாலும் அவர்களுக்கான தொகைக்கு வட்டி போட்டுவருவதாலும் தான் மிகுந்த மனஉளைச்சலுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் பசவராஜ்.

இதனால் தானும் தனது குடும்பமும் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வரும் நிலையில் பசவராஜ் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாகவும் அல்லது தன்னை கருணை கொலை செய்துவிடும் படி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பெல்லி பிரகாஷ் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக தாலுகா செயல் அலுவலர் தேவராஜ் நாயக் தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ள பசவராஜ் அதற்கான ஆதாரங்களையும் அந்த கடிதத்துடன் இணைத்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகிய இடங்களில் இருந்து பில் தொகையை வழங்க உத்தரவு வந்தபோதும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் தலைமை செயலாளர் தனக்கு பணம் வழங்கமறுத்து வருவதற்கான சான்றுகளையும் வழங்கியுள்ளார்.

கமிஷன் விவகாரம் கர்நாடகாவில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் கருணை கொலை செய்யக்கோரி கான்ட்ராக்டர் ஒருவர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.