வாஷிங்டன் (யு.எஸ்):
“உரலுக்கு ஒரு பக்கம் இடி… மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி” என்று நம் ஊரில் பழமொழி சொல்வார்கள். அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, குடியரசு கட்சி சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றாகவே பொருந்துகிறது.
எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பாக அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் ஹிலாரி கிளின்டனும், அவரது கட்சியினரும் ட்ரம்பட்டுக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலையில் சொந்த கட்சிக்குள்ளேயே டிரம்ப்டுக்கு எதிர்ப்பு வலுத்து வருவதுதான் சோகம்.
எந்த அரசியல் பின்புலமும் இல்லாதவர்,  அரசு பொறுப்பு அல்லது அரசியல் பதவியோ வகிக்காமல் நேரடியாக உட்கட்சித் தேர்தலில் போட்டியிட்டு குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆனவர், வெற்றிகரமான தொழிலதிபர், ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர்.. இப்படி பல ப்ளஸ்கள் டிரம்ப்புக்கு உண்டு.   அமெரிக்க அரசியலில் ஒரு மாற்றமாக இவரை பார்த்தவர்களும் உண்டு.
குடியரசுக் கட்சியினரும்,  ட்ரம்ப்தான் இந்த தேர்தலில் ஹிலரியைத் தோற்கடிக்கக் கூடியவர் என்று அவர் பின்னால் அணி திரண்டனர்.
உட்கட்சித் தேர்தலில் ட்ரம்ப்-க்கு எதிராக கட்சியின் பெரும்புள்ளிகளான ஜெப் புஷ், க்ரிஸ் கிரிஸ்டி போன்றவர்களால் தாக்கு பிடிக்கமுடியவில்லை.  இந்த நிலையில் ஃப்ளோரிடா மாகாண செனட்டரான மார்க்கோ ரூபியோதான், ட்ரம்ப்பின் போட்டியாக கருதப்பட்டார். அவரும் சொந்த மாநிலத்திலேயே தோல்வியைத் தழுவி, விலகிக்கொண்டார்.
download
ட்ரம்ப்புடன் இறுதிவரையிலும் மல்லுக்கட்டியவர் டெக்சாஸ் செனட்டர் டெட் க்ரூஸ் என்பவர்தான். ஆனால் அவரும் கட்சித் தலைவர்களிடமிருந்து விலகியே இருந்தவர் என்பதால் ஆதரவு இல்லை.  தவிர அவருடைய தீவிர வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு நிலவியது.
கடைசி வரையிலும் களத்தில் இருந்த இன்னொரு போட்டியாளரான ஜான் கேசிக், பெயருக்குத்தான்  போட்டியாளராக இருந்தார்.
இறுதியில் கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ரம்ப்தான் என்றாகிவிட்டது.  ஆனால், ட்ரம்ப்பின் அதீத பேச்சே அவருக்கு எதிராக அமைந்துவிட்டது. “மெக்சிகோவிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக குடியேறிவர்கள் அனைவரும் கற்பழிப்பு குற்றவாளிகள், 12 மில்லியன் மக்களையும் நாடு கடத்த வேண்டும், இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை அனுமதி வழங்கக் கூடாது” என்றெல்லாம் பேசியது, ட்ரம்ப் அதிபர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர் தானா என்ற கேள்விகளையும் எழுப்பியது.
ட்ரம்ப்-ன் இத்தகைய பேச்சுக்கள், குடியரசுக் கட்சியை சிறுபான்மை மக்களிடமிருந்து முற்றிலும் விலகிச் செல்ல  வைத்து விட்டது.
ட்ரம்ப்-ன் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் முந்தய அதிபர் வேட்பாளார் மிட் ராம்னி தான். “ட்ரம்ப் அதிபர் வேட்பாளராவது குடியரசுக் கட்சிக்கு பெரும் தோல்வியை ஏற்படுத்தும்” என்று கூறி, டெட் க்ரூஸ்-க்கு ஆதரவு திரட்டினார். இப்போது  குடியரசுக் கட்சித் தலைவர்கள் பலரும்  ட்ரம்ப்-க்கு எதிராக கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டனர். முன்னாள் அவைத் தலைவர் நியூட் கிங்ரிச், “ட்ரம்ப் ஒரு ‘கொடுத்து வைத்த கத்துக்குட்டி’” என்று கிண்டலாக வர்ணித்துள்ளார்.
தற்போதைய அவைத் தலைவர் பால் ரயன், “ட்ரம்ப்-ன் பேச்சுக்கள் கண்டிக்கதக்கவை. இது ஏற்புடைய கருத்து அல்ல. நாட்டு மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு இத்தகைய கருத்துக்கள் உதவாது. கட்சியினர் பெருமைப்படக்கூடிய வகையில் இனி தேர்தல் பிரச்சாரங்கள் அமைய வேண்டும்”  என்று கூறியுள்ளார்.
செனட் அவைத் தலைவர் மிச் மெக்கானல், “ட்ரம்ப்-க்கு நாட்டில் உள்ள பிரச்சனைகள் பற்றி தெரியவில்லை. அவருடைய பிரச்சாரங்கள் அவரை நல்ல அதிபர் வேட்பாளராக வெளிப்படுத்தவில்லை. இஷ்டத்துக்கும் கருத்துகளை சொல்லாமல், எழுதி வைத்தாவது படிக்கட்டும்,” என்று தெரிவித்திருக்கிறார்.
பெரும்பான்மையான கட்சித் தொண்டர்களின் தேர்வு என்பதால் ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராவதில் எந்த சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை. அனைத்து தலைவர்களும் ட்ரம்ப் தான் கட்சி வேட்பாளர் என்பதை தெளிவாக ஒப்புக் கொள்கின்றனர். ஆனால், அவருடைய பிரச்சாரத்தையும், திடீர் திடீரென்று ட்விட்டரில் வெளியிடும் கருத்துக்களையும் ஜீரணித்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளார்கள்.
ட்ரம்ப்- தனது அதிரடி பேச்சுக்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் கட்சிக்கு பெரும் தோல்வியே கிடைக்கும்  என்ற அச்சம் ஜனநாயக கட்சிக்குள் நிலவுகிறது.
கட்சி மாநாட்டில் “ஏதாவது செய்து” ட்ரம்ப்-க்கு பதிலாக வேறொருவரை முன்னிறுத்தும் முயற்சியும் நடைபெறுகிறது.
ஆக “ட்ரம்”ப், அடக்கி வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்!