புவனேஸ்வர்
ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பைஜயந்த் பண்டாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார்.
பிஜு ஜனதா தள் கட்சியை சேர்ந்த பைஜயந்த் பண்டா கேந்திரபாரா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்த தொகுதியின் உறுப்பினராக கடந்த பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கடந்த 2014ஆம் வருட தேர்தலுக்குப் பின் இவர் பாராளுமன்ற நிதிநிலைக் குழுவின் தலைவராக விரும்பியதாகவும் அது நிறைவேறாததால் கட்சியைப் பற்றி அவதூறாகப் பேசி வருவதாகவும்கூறப்படுகிறது.
இவர் தற்போது ஒரிசாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு பெறாமல் ஒதுங்கி இருந்தார் மேலும் இவர் இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனமான ஐ எம் எஃப் ஏ வில் இயக்குனராக பணி புரிந்து வருகிறார். இதனால் இவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக கிடைத்த ஊதியத்துடன் இந்த நிறுவனத்தில் இருந்து ரூ. 1.45 கோடிக்கு மேல் ஊதியம் கிடைத்துள்ளதாகவும் பிஜு ஜனதா தள் தலைமை குற்றம் சாட்டியுள்ளது.
இதையொட்டி அவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி பிஜு ஜனதா தளத் தலைவரும் ஒரிசா மாநில முதல்வருமான நவின் பட்நாயக் இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.