திருப்பூர்

காங்கேயம் பதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பலர் கொத்தடிமைகளாக நடத்தப் படுவதாக புகார்கள் வந்துள்ளன.

Coconut Coir Husk

கடந்த வாரம் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் சென்னை செண்டிரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கி உள்ளனர். குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவர்கள் பீகாரில் இருந்து வந்துள்ளதாகவும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் சில மாதங்களாக பணி புரிவதாக தெரிவித்துள்ளனர்.

அதை ஒட்டி அவர்களிடம் மேலும் விசாரணை நடத்திய போது காங்கேயம் அருகே உள்ள பரஞ்செரிவாலியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் பலர் பணி புரிவது தெரிய வந்துள்ளது. இவர்களை ஒரு தரகர் முன் பணம் கொடுத்து அழைத்து வந்துள்ளார்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த தன்னார்வு தொண்டர் ஒருவர், “தென்னை நார் தொழிற்சாலையில் இவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இவர்களுக்கு இருப்பிடம் மற்றும் உணவு அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் ஊதியம் எதுவும் தரப்படாம இருந்துள்ளது. அந்த இடத்தை விட்டு அனுமதி இன்றி வெளியே செல்ல முடியாமல் உள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

அந்த சிறுவர்கள் சென்னையில் உள்ள அரசு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட அரசு அதிகாரிகள் அங்கு சென்று மூன்று நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் சுமார் 30 பேர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் பீகாரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.