பாட்னா:

பீகார் அரசு பணியாளர் தேர்வாணைய கேள்விதாள் கசிவான வழக்கில் அந்த ஆணைய தலைவரான ஐஏஎஸ் அதிகாரி சுதிர்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீதான நடவடிக்கை அந்த மாநிலத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் சங்க அவசர கூட்டம் நடந்தது. இதில் சுதிர்குமாரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.  கடந்த மாதம் 14ம் தேதி 24 பேர் இறக்க காரணமாக இருந்த படகு விபத்து சம்பவத்தை தொடர்ந்து பாட்னா கூடுதல் ஆர்டிஓ ராஜேஷ் சவுத்ரி, கட்டுப்பாட்டு அறை பொறுப்பாளர் மன்சூல் ஆலம் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சோனேப்பூர் சார்பு கோட்ட அதிகாரி மதன் குமார் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இவர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடவடிக்கையை திரும்ப பெறுவது தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமாரை சந்திக்கவும் முடிவு செய்துள்ளனர்.

மேலும், முதல்வர் உள்ளிட்ட யாருடைய வாய்மொழி உத்தரவையும் ஏற்கமாட்டோம். சுகில்குமாருக்கு நியாயம் கிடைக்கும் வரை அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பதவி, தொழில்நுட்ப பணி வாரிய பதவியையும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் யாரும் ஏற்க மாட்டோம் என்றும் முடிவு செய்துள்ளனர். சுகில் குமார் விவகாரத்தில் சிபிஐ ஒரு தலைபட்சமாக நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் குற்றம்சாட்டினர்.

மாநில கவர்னர் ராம் நாத் கோவிந்தை இச்சங்கத்தினர் நேற்று சந்தித்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்துள்ளனர். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் வரை நடந்தது. அதிகாரிகள் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் பணியாற்ற பாதுகாப்பு வழங்க வேண்டும். சுகில் குமாரை விடுதலை செய்ய கவர்னர் தலையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதேபோல் பீகார் மாநில காவல் பணி அதிகாரிகள் சங்கமும் அதிருப்தியில் உள்ளது.
படகு விபத்து தொடர்பாக சோனேப்பூர் சார்பு கோட்ட போலீஸ் அதிகாரி முகமது அலி அன்சாரி சஸ்பென்ட் செய்யப்பட்டது தான் இந்த அதிருப்திக்கு காரணமாக உள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கமும் விரைவில்  இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கெள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.