பாட்னா
பீகார் மாநிலத்தில் 16 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலில் அறிவித்த அரசு பிறகு அதைத் திரும்பப் பெற்றுள்ளது.
பீகார் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இங்கு ஒரே நாளில் 2,840 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 43,500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 269 பேர் மரணம் அடைந்துள்ளனர். எனவே இந்த மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த நேற்று மாநில அரசு முழு ஊரடங்கை அறிவித்து உத்தரவிட்டது.
அந்த உத்தரவின்படி மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் 16 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பீகார் மாநிலத்தில் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க இந்த ஊரடங்கு அவசியம் என்பதால் இதை பிறப்பித்துள்ளதாக அம்மாநிலத்தை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தெரிவித்து இருந்தது.
இந்த உத்தரவின்படி அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் மட்டும் இயங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், தொழிலகங்கள் உள்ளிட்டவையும் 50% ஊழியர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் அரசு திடீரென இந்த ஊரடங்கு உத்தரவைத் திரும்ப பெற்றுள்ளது. இது குறித்து ஒரு ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்க உள்ளதாகவும் அதன் பிறகு முடிவு எடுக்கப்பட்டு அனேகமாக இன்று மாலை அறிவிக்கப்படும் எனவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தான் பிறப்பித்த உத்தரவை திடீரென திரும்பப் பெற்றது மக்கள் மத்தியில் கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.