பீகார்:
கொரோனா தடுப்பூசியை சேமிக்க பீகார் நலந்தா மருத்துவ கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை சேமிப்பதற்கு குளிர்ந்த இடம் தேவைப்படும் என்பதால், பீகார் சுகாதாரத்துறை நலந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குளிர் சேமிப்பை உருவாக்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி பீகார் சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளதாவது: நலந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின்  மூன்று மாடி கட்டிடத்தை குளிர்சாதன இடமாக மாற்றி உள்ளதாகவும், தற்போது கொரோனா தடுப்பூசிக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும், தடுப்பூசி வந்தவுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிப்பதற்கு சேமிப்பு மற்றும் போதுமான உள்கட்டமைப்பு எங்களிடம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 நலந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இந்த கட்டிடம் முன்னர் மருத்துவ உபகரணங்களை சேமிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த கட்டிடம் ஒரே நேரத்தில் 6 லட்சம் தடுப்பூசிகளை சேமிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. பீகாரில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகள் வினியோகம் இங்கிருந்துதான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி வந்தவுடன் முதற்கட்டமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் என்றும் பிகார் மாநிலம் அறிவித்துள்ளது.