சென்னை:

மீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதப், காயம் காரணமாக இன்னும் நடைபெற உள்ள ஆட்டத்தில் விளையாடுவரா என்பது கேள்விக் குறியாகி உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும், அவர் சிகிச்சைக்கு பிறகே அடுத்த போட்டி களில் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்து உள்ளார்.

சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்று, பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிட்டதால், இந்த ஐபிஎல் கோப்பை சென்னைக்கே கிடைக்கும் என கனவில் மிதந்தும் சென்னை ரசிகர்களுக்கு ஜாதவின் உடல்நிலை கவலையை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மொகாலியில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது, ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவுக்கு காயம் ஏற்பட்டதால், எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது.

சமீபத்தில்தான் கேதர் ஜாதவ், தனது 34வது  பிறந்தநாளை கேக் வெட்டி சிஎஸ்கே வீரர்கள் உற்சாக மாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடிய வீடியோ வெளியாகி  பெரும் வரவேற்பை பெற்ற நிலை யில், தற்போது காயம் காரணமாக அவர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  பயிற்சியாளர் பிளெமிங் “கேதர் ஜாதவுக்கு ஸ்கேன் எடுக்க இருப்பதாகவும், அதில் கிடைக்கும் ரிசல்டை தொடர்ந்தே, அவர் மீண்டும் தொடரில் விளையாடுவாரா  என்பது குறித்து தெரிய வரும் என்றவர், தற்போதைய நிலையில், ஜாதவ் அசவுகரியமாக இருக்கிறார் என்று கூறினார்.

ஸ்பின் ஆல் ரவுண்டரான கேதர் ஜாதவ், கடந்த சீசனில் முதல் போட்டியிலேயே காயம் அடைந்து தொடரை விட்டே வெளியேறினார். இப்போது, முழு ஃபிட்டாக களமிறங்கியிருந்த நிலையில், மீண்டும் காயம் காரணமாக இறுதிப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று  கூறப்படுகிறது.

சமீபத்தில் பிசிசிஐ அறிவித்துள்ள உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.