ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றப்போவது யார்? களத்தில் இறங்கிய 3வது அணி…

Must read

டில்லி:

17வது மக்களவையை கட்டமைக்கும் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இன்று 5வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆட்சியை தீர்மானிக்கும் தொகுதிகளின் வாக்குப்பதிவு இன்றுடன் முடிவடையும் நிலையில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

நாட்டின் அடுத்த பிரதமராக பதவி ஏற்பார் என மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் உ.பி.மாநிலம் அமேதியிலும் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதுபோல, தற்போதைய பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியிலும் விறுவிறுப்பான வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

மோடியின் கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பணமதிப்பிழப்பில் தொடங்கி, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றால் நாட்டு மக்கள்  கடுமையான துயரத்துக்கும், துன்பத்துக் கும்  ஆளாக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பாஜக அரசுக்கு எதிரான மனநிலையே மக்களிடம் எழுந்துள்ளது. இதன் காரணமாக பாஜக மீண்டும் ஆட்சியை பிடிப்பது கேள்விக் குறியானதே.

இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர் கள் ஒன்றிணைந்து மோடி அரசுக்கு எதிராக தங்களது அரசியல் வியூகங்களை அமைத்து வந்தனர். இடையில், பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் அவர்களுக்குள் ஒன்றுமையில்லாத நிலையில், தேர்தல் முடிவடைந்தபிறகு, அதுகுறித்து விவாதிக்கலாம் என்று கூறி தேர்தலை சந்தித்து வருகின்றனர்.

இதற்கிடையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி சார்பில் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என அறிவித்து விட, சில எதிர்க்கட்சி தலைவர்கள் முனுமுனுக்கத் தொடங்கினர். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியில் இணைந்திருந்த  மம்தா, சந்திர பாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மாயாவதி, சமாஜ்வாதி போன்ற கட்சிகள் மாநில அரசியலில் காங்கிரசுக்கு எதிராகவே களமிறங்கின.  இதன் காரணமாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியில்  சற்று சலசலப்பு ஏற்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்த னர்.

தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய மம்தா, மத்தியில் ஆட்சி அமைப்பதில் தனது பங்கு பிரதானமாக இருக்கும் என்று கூறி வருகிறார். அதுபோல மாயாவதியும் தங்களது ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது, ஆட்சி அமைப்பதை உ,பி. மாநிலம்தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், தற்போது 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்னும் 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மட்டுமே மீதமுள்ள நிலையில், தேர்தலும் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அதே சமயத்தில் 3வது அணி அமைப்பதற்கான அறிகுறிகளும் தென்படத் தொடங்கி உள்ளன.

545 தொகுதிகளை கொண்ட இந்திய பாராளுமன்றத்துக்கு இன்றைய வாக்குப்பதிவுடன் 425 தொகுதி களில் தேர்தல் முடிய உள்ளது. அதுபோல, இன்றுடன்   ராஜஸ்தான், காஷ்மீர் மாநிலங்களிலும்  தேர்தல் நிறைவடைகிறது.

6வது கட்ட தேர்தல் 12-ந் தேதி 59 தொகுதிகளுக்கும், 7வது கட்ட தேர்தல் 19-ந் தேதி 59 தொகுதி களுக்கும் நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து மே 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது,  5-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 51 தொகுதிகளில் 41 இடங்களை பாஜக கைப்பற்றியது. ஆனால், இந்த முறை நிலைமையே வேறு. மேலும் மற்ற மாநிலங்கள் அனைத்தும் பாஜகவுக்கு எதிரான மாநிலங்கள். ஆகவே இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக மண்ணை கவ்வும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், 2014ம் ஆண்டை  தேர்தலில் பாஜக இந்த 10-ல் 3 தொகுதிகளில் மட்டுமே வென்ற பெற முடிந்தது. மற்ற தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரசே சுமார் 24 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தற்போதும் அதே நிலைதான் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

அதுபோல உ.பி. மாநிலத்தில்  ரேபரேலி, அமேதி தொகுதிகளில் சோனியா மற்றும் ராகுல் காந்தி போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு  பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கட்சிகள், காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ளது .இதன் காரணமாக அங்கு சோனியா, ராகுல் அமோக வெற்றி பெறுவார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் தொகுதியில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.அங்கும்பாஜக காலூன்ற வாய்ப்பு இல்லை. மேலும்,  ஜார்க்கண்ட், மத்திய பிரதேச மாநிலங்களிலும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வைத்துஆய்வு செய்யும்போது, அந்த மாநிலங்களிலும் பாஜகவுக்கு பின்னடைவே ஏற்படும் என நம்பப்படுகிறது.

இந்திய லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருக்கியுள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் கைப்பற்றப்போவது யார் என்பது  குறித்து இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்கப்போது யார் என்பது குறித்து மக்களியே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றுமா? ராகுல்காந்தி பிரதமராகும் வாய்ப்பு ஏற்படுமா? தொங்கு பாராளுமன்றம் அமையுமா? அல்லது 3வது அணியை சேர்ந்த ஒருவர் பிரதமராக வாய்ப்பு உருவாகுமா என்பது குறித்து பெரிய விவாதங்களே நடைபெற்று வருகின்றன.

ஆனால், நடைபெற்று வரும் தேர்தலையும், வாக்குப்பதிவுகளையும் வைத்து ஆய்வு செய்தோ மானால், பாஜக, காங்கிரஸ் கூட்டணிகள் முழு மெஜாரிட்டியை பிடிப்பது கஷ்டம் என்றே தோன்றுகிறது. இதன் காரணமாக ராகுல்காந்தி பிரதமராவும் வாய்ப்பு குறைவு என்றே அரசியல் விமர்கர்கள் கணித்துள்ளனர்.

அதே வேளையில் பாஜக ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என பகீரத பிரயத்தனத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில கட்சிகளை விலைபேசி, தங்களது பக்கம் இழுக்க முடிந்த அளவிலான நெருக்கடியை கொடுக்கும்.

ஆனால், இதையெல்லாம் விடுத்து 3வது அணியை உருவாக்கி  ஆட்சியை கைப்பற்ற ஒரு தரப்பினர் மும்முரமாக களமிறங்கி உள்ளனர்.

இதுதொடர்பாக சந்திரசேகராவ் ஏற்கனவே மம்தா உள்பட சில தலைவர்களை சந்தித்து பேசி வந்துள்ள நிலையில், தற்போது கம்யூனிஸ்டு தலைவர்களை சந்தித்து வருகிறார். அதே வேளையில் 3வது அணியை உருவாக்க முன்னணியில் நின்று செயல்பட்டு வரும் சந்திரசேகர ராவுக்கும், ஆந்திர முதல்வர் சந்திரபாபுவுக்கும் ஏழாம் பொருத்தம். இதன் காரணமாக 3வது அணியில் இருவரும் ஒன்று சேர்வார்களா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த பிரச்சினை ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் திமுகவின் நிலை என்ன என்பதும் பல மில்லியன் டாலர்கள் கேள்வி.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதன்முதலாக ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியவர். இன்றுவரை ராகுல்காந்திதான் பிரதமராக வருவார் என்று தேர்தல் பிரசாரங்களில் நம்பிக்கையுடன் தெரிவித்து வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த  சூழ்நிலையில், 3வது அணிக்கு திமுக ஆதரவு கொடுக்குமா என்பது சந்தேகம்தான்.

திமுகவின் ஆதரவு காங்கிரசுக்குத்தான் உறுதியாக கிடைக்கும் என்று நம்பப்படும் நிலையில், ராகுல் பிரதமராக வாய்ப்பு உருவாகாத நிலை ஏற்பட்டால், 3வது அணிக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அல்லது காங்கிரஸ் உதவியுடன் வேறு ஒருவர்  பிரதமராக முன்னிறுத்தப்படலாம் என்ற தகவலும் உலா வருகின்றன.

மீண்டும் பாஜக ஆட்சி ஏற்படக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வரும் நிலையில், தேர்தல் முடிவுகள் என்ன சொல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More articles

Latest article