ஐதராபாத்:
ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிந்த பின்னர் இந்திய அரசியலில் தெலுங்கு இன மக்களின் செல்வாக்குக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கருத்துக்கள் எழுந்துள்ளது. மாநில பிர ச்னைகளுக்கு கூட தெலுங்கு மக்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க முடியாத ஏற்பட்டுள்ளது.
தேசிய அரசியல் தெலுங்கு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. 34 எம்.பி.க்களுடன் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்கட்சியை போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆந்திரா, தெலங்கானா முதல்வர்கள் அவருக்கு ஆதரவு அளி க்கும் நிலை தான் தற்போது நிலவுகிறது.
மாநிலத்தை பிரிப்பதற்கு சீமந்திரா மண்டலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட எதிர்ப்பு தெரிவித்தனர். தேசிய அரசியலில் தெலுங்கர்களின் ஆதிக்கத்தை பலவீணமாக்க மாநில பிரிவினைக்கு அப்போது உள்துறை அமைச்சராக இருந்த தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் சதி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் 42 லோக்சபா தொகுதிகள் இருந்தது. இது மேற்கு வங்க மாநிலத்துக்கு சமமாக இருந்தது. தற்போது ஆந்திராவில் 25 தொகுதிகளும், தெலங்கானாவில் 17 தொகுதிகளும் உள்ளது.
உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை விட குறைவான எண்ணிக்கையில் உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தோடு ஒப்பிடுகையில் சம நிலையில் ஆந்திரா உள்ளது. தெலங்கானா பிரிவதற்கு முன்பு உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மட்டுமே ஆந்திராவை விட அதிக லோக்சபா உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களாக இருந்தது.
இந்திய அரசியலில் வடக்கு, தெற்கு என்று எப்போதுமே ஒரு பாகுபாடு உண்டு. ஆந்திராவின் பிரிவு 2 மாநிலங்களுக்குமே அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார ரீதியாக அதிகளவில் மத்திய அரசை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தான் தற்போதைய சிறப்பு அந்தஸ்து கோரிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா அரசியலில் சீமந்திரா மண்டலம் எப்போதும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும். பெரும்பாலும் இந்த மண்டலத்தை சேர்ந்தவர்கள் தான் முதல்வர்களாக இருப்பார்கள். தற்போது இந்த பகுதி ஆந்திரா மாநிலத்தோடு உள்ளது. தெலங்கானா மண்டலத்தோடு ஒப்பிடுகையில் சீமந்திரா பகுதி சமமற்ற நிலையிலான அரசியல் அதிகாரத்தை தான் அனுபவித்து வருகிறது.
சீமந்திரா பகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், தெலங்கானா மாநிலத்தோடு தொடர்பு இல்லாதவர்கள் போன்ற நிலையே நீடிக்கிறது. தெலங்கானா ராஷ்ட்ரீய சமீதி போன்று வேறு மாநில கட்சிகள் தெலங்கானாவில் இல்லாத நிலை உள்ளது. இதனால் மக்களுக்கு மாற்று கட்சி என்ற சிந்தனையை எழ வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. பூலோக ரீதியாக மட்டுமின்றி இரு மாநிலங்களும் அரசியல் ரீதியாகவும் பிரிந்துள்ளது.
இதேபோன்ற நிலை தான் தேசிய கட்சியான பாஜக.வுக்கும் ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் பாஜக மிக குறைந்த சக்தியாகவே உள்ளது. ஆந்திராவில் 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் 30 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியமைத்தது. ஆனால், தற்போது இங்கு முந்தைய நிலை இல்லை என்றாலும், சில இடங்ககளை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் அதிகப்படியான விலையை கொடுக்க முன்வந்தது. ஆனால் காங்கிரஸ் கணக்கு தவறாகி போனது.
லோக்சபா தேர்தலில் இக்கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட மக்கள் வாய்ப்பளிக்கவில்லை. தெலங்கானா மாநிலத்தை பிரிக்க உதவி செய்த காங்கிரஸ் கட்சிக்கு அந்த மாநிலத்திலும் மக்கள் வாய்ப்பளிக்கவில்லை. மாநிலத்தை பிரிப்பதற்கு நடந்த போராட்டத்தின் போது காலம் கடத்தியது மற்றும் தெளிவு இல்லாமை காரணமாக காங்கிரஸூக்கு மக்கள் இத்தகைய தண்டனையை அளித்தனர் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக களம் கண்டு, தெலுங்கு தேசம் கட்சி 1980ல் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் எதிர்ப்பு சக்தியாக விளங்கிய தெலுங்கு அரசியல்வாதிகளான என்.டி.ராமராவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தேசிய முன்னணிக்கு தலைவராகவும், அமைப்பாளராகவும் இருந்துள்ளனர். வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு தெலுங்குதேச எம்.பி.க்களின் ஆதரவு முக்கியமாக இருந்தது. லோக்சபாவில் பிரதான எதிர்கட்சியாகவும் தெலுங்கு தேசம் இருந்தது.
தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவு அவசியமின்றி மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது. இது தெலுங்கு அரசியல் கணக்கை மாற்றி அமைத்துவிட்டது. மத்திய அரசில் தெலுங்கு கட்சிகளால் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்படடுவிட்டது. தெலுங்கு தேசம் மற்றும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி ஆகிய கட்சிகள் இடையே ஏற்பட்ட போட்டி தேசிய அரசியலில் தெலுங்கு மக்களுக்கு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. உள்நோக்க அரசியல் நடத்தும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸை பாஜக ஒரு எதிரியாக கூட கருதவில்லை.
இது போன்ற காரணங்களால் மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. மாநில பிரிவினையால் விரோதம் மட்டுமே வளர்ந்துள்ளது. தங்களது அடையாளத்திற்காக தேசிய அரசியலில் தெலுங்கு அரசியல்வாதிகளால் இணைந்து குரல் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.