புதுடெல்லி:

போர் விமானத்தை இயக்கும் தகுதி கொண்ட முதல் பெண் விமானி என்ற பெருமையை பாவனா காந்த் பெற்றுள்ளார்.


மிக்-21 ரக போர் விமானத்தை இயக்கும் பயிற்சியை கடந்த புதன்கிழமை முடித்த பாவனா காந்த், போர் விமானத்தை இயக்கும் தகுதி கொண்ட முதல் பெண் என இந்திய விமானப் படையின் ட்விட்டரில், பெண் அதிகாரம் என்ற தலைப்பிட்டு ட்விட் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 27-ம் தேதி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இயக்கி, பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்தான் இந்த மிக்-21 என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாவனா பிகேனரில் உள்ள நல் தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். பயிற்சி முடிந்ததால், இரவு நேர பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள இருக்கிறார்.

அர்ப்பணிப்பும், கடின உழைப்பும், விடா முயற்சியும் பாவனாவை இத்தகைய சாதனையை எட்ட உதவியிருப்பதாக, இந்திய விமானப் படை செய்தி தொடர்பாளர் கேப்டன் அனுபம் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு பாவனா காந்த், அவானி சதுர்வேதி மற்றும் மோகனா சிங் ஆகியோர் போர் விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபடுவோர் பட்டியலில் இடம்பெற்றனர்.

இதில் பாவனா தகுதி மட்டும் பெற்றுள்ளார்.
போர் விமானங்களை இயக்கும் பயிற்சிக்காக அடுத்த குழுவில் இடம் பெற இருக்கும் 3 பெண்களை இந்திய விமானப் படை ஏற்கெனவே  தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.