சென்னை: உடல்நலப் பாதிப்பு காரணமாக மரணமடைந்த  பவதாரிணி உடல் இன்று அவரது சொந்த ஊரான பண்ணைபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதில் இளையராஜா கலந்துகொள்வார் என தெரிகிறது.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி, உடல்நலப் பாதிப்பு காரணமாக, இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் நேற்று மாலை, விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் வைக்கப்பட்ட பவதாரிணி உடலுக்கு, திரையுலகைச் சேர்ந்த பலர் அஞ்சலி செலுத்தினர். ரஜினி, கமல், பாரதிராஜா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.  தொடர்ந்து, நேற்று அவரது உடல்  சொந்த ஊரான தேனியில் உள்ள பண்ணைபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று இறுதி அஞ்சலி நிகழ்ச்சி, பண்ணைபுரத்தில் நடக்க உள்ளது. இன்று காலை 10மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

பிரபுதேவா, ரோஜா நடித்த ‛ராசய்யா’ திரைப்படத்தில் தனது தந்தை இளையராஜாவின் இசையில் ‛மஸ்தானா மஸ்தானா…’ என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து 2001ல் பாரதி திரைப்படத்தில் இவர் பாடிய ‛மயில் போல பொண்ணு ஒன்னு…’ என்ற பாடலை பாடிய பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்தது. வேறு எந்தவொரு பாடகி குரலின் சாயலும் இல்லாமல், தனித்துவம் மிக்க குரல் இனிமையில் பல வெற்றி பாடல்களை பாடியிருக்கிறார் பவதாரிணி.

2002ல் நடிகை ரேவதி இயக்கிய மித்ர் – மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழில் அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி, மாயநதி உள்ளிட்ட 10 படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். பவதாரிணிக்கு சபரிராஜ் என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

பவதாரிணியின் உடன் பிறந்த சகோதரர்களான கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் தந்தை இளையராஜா போன்று சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்றனர். பவதாரிணியின் திடீர் மறைவு இளையராஜா குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் பவதாரிணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அதோடு இளையராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் பவதாரிணியின் உடலுக்கு அவரது தந்தையான  இசையமைப்பாளர் இளையராஜா அஞ்சலி செலுத்த வராதது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  அதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே இலங்கையில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த இளையராஜா, தனது மகள் இறந்த செய்தியை கேட்டு உடனடியாக மருத்துவமனை சென்று பார்த்த நிலையில்,  அவர் உடனே சென்னை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதால், இதனால், அவர் நேற்று பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று  பவதாரணியின் உடல் தேனி அருகே உள்ள பண்ணைபுரத்தில்  அடக்கம் செய்யப்ப உள்ளதால், இளையராஜா இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து தனது மகளின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.