தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தலில் தேனாண்டாள் முரளி, டி.ராஜேந்தர், பி.எல் தேனப்பன் ஆகியோர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட்டன. இதில் தேனாண்டாள் முரளி வெற்றிப்பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இயக்குநரும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்குப் பின் தேர்தல் நடைபெற்றதை வரவேற்கிறேன்.

தயாரிப்பாளர்கள் இணைந்து வாக்களித்ததில் மகிழ்ச்சி. எப்போதும் நம்மை நாம் ஆள்வது அவசியம். அப்போதுதான் உள்ளவர்களின் தேவையை உணர்ந்து பணியாற்ற முடியும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பொருத்தவரை நிறைய சவால்கள் முன் நிற்கின்றன.

இடைப்பட்ட காலங்களில் முடங்கிப் போன நிர்வாகம் சீரமைக்கப்பட்டு முடுக்கி விடப்பட வேண்டும். எனவே, தேர்தலில் வெற்றி பெற்ற குழு பணியாற்றக் கூடாது. தீவிர செயலாற்ற வேண்டும். திரு. முரளி இராம நாரயணன் அவர்களின் தலைமைக்கு வாழ்த்துகள். வெற்றி பெற்ற அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

என்ன வாக்குறுதிகள் சொல்லி வந்தீர்களோ அவற்றை நிறைவேற்றப் போராடுங்கள். சங்கம் மீண்டும் துளிர்த்தெழட்டும். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெற்றி பெற்ற உங்களனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம்” என கூறியுள்ளார் .