மகாகவி பாரதியாரின் 136வது பிறந்தநாள் விழாவை தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்தியது.
தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமையில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பாரதி பிறந்த இல்லத்தில் இருந்து பாரதியின் தேசபக்தி பாடல்களை முழக்கமிட்டபடி ஊர்வலமாக எட்டயபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பாரதி மணிமண்டபத்தை அடைந்தனர்.
பிறகு தொடங்கிய விழாவுக்கு அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க அவை முன்னவர் வாசுகி கண்ணப்பன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் கோ. பெரியண்ணன், பொதுச் செயலர் இதயகீதம் ராமானுஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியை ஆதிரா முல்லை வரவேற்புரையாற்றினார்.
பிறகு பாரதி விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி பேராசிரியை விஜயலட்சுமி உள்ளிட்ட பாரதி அன்பர்கள் 34 பேருக்கு பாரதி பணிச்செல்வர் விருதும், பேராசிரியை வாசுகி கண்ணப்பனுக்கு பாரதி இலக்கியச் செல்வர் விருதும் அளிக்கப்பட்டன.
தொடர்ந்து, வல்லமை தாராயோ என்ற கவிதை நூல் தொகுப்பை நடிகர் டில்லி கணேஷ் வெளியிட்டார். முதல் பிரதியை உரத்தசிந்தனை ஆசிரியர் உதயம் ராம் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், பாரதி அன்பர்கள் திரளாகப் பங்கேற்றனர்.