டெல்லி: முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும்  என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சமீபத்தில்,  பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது முன்னாள் பிரதமர்கள்  உள்பட 3 பேருக்கு  பாரத ரத்னா அறிவிக்கப்பட்டு உள்ளது.

1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பாரத ரத்னா இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதாகும். இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடுகள் இல்லாமல், மனித முயற்சியின் எந்தவொரு துறையிலும் விதிவிலக்கான சேவையை அங்கீகரிக்கும் வகையில் இது வழங்கப்படுகிறது.

அதன்படி, பி.வி.நரசிம்ம ராவ், சௌத்ரி சரண் சிங், மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா அவார்டு  அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள்  தேசத்தின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னாவைப் பெற உள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,

நரசிம்மராவ் ” சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும், பல்வேறு பதவிகளை வகித்து நரசிம்ம ராவ் இந்தியாவுக்கு சேவை செய்துள்ளார். ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும், பல ஆண்டுகளாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் நினைவுகூரப்படும்.

அவரது தொலைநோக்கு பார்வையால் தலைமை பண்பால் இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறியது. நாட்டின் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். பிரதமராக நரசிம்ம ராவ் பதவி வகித்தபோது, இந்தியாவை உலக சந்தைகளுக்கு சிறந்துவிட்டு பொருளாதார வளர்ச்சியில் புதிய சகாப்தத்தை படைத்தார்.

மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, மொழி மற்றும் கல்வித் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகள், முக்கியமான மாற்றங்களின் மூலம் இந்தியாவை வழிநடத்தியது மட்டுமல்லாமல் அதன் கலாச்சார மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தையும் செழுமைப்படுத்திய ஒரு தலைவராக அவரது பன்முக மரபை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

எம்.எஸ். சுவாமிநாதன் குறித்து குறிப்பிடுகையில், “விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சவாலான காலங்களில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். ஒரு கண்டுபிடிப்பாளராகவும் வழிகாட்டியாகவும் பல மாணவர்களிடையே கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் அவரது விலைமதிப்பற்ற பணியை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்கு பார்வை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் செழுமையையும் உறுதி செய்துள்ளது. அவர் எனக்கு நெருக்கமாகத் தெரிந்த ஒருவர், அவருடைய நுண்ணறிவு மற்றும் உள்ளீடுகளை நான் எப்போதும் மதிப்பேன்” என பதிவிட்டுள்ளார்.

சரண் சிங் குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி, “நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது முழு வாழ்க்கையையும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அர்ப்பணித்தவர்.

உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, எம்எல்ஏவாக இருந்தாலும் சரி தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவர் எப்போதும் உத்வேகம் அளித்தார். எமர்ஜென்சிக்கு எதிராகவும் உறுதியாக நின்றார். நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு அவர் காட்டிய அர்ப்பணிப்பும், நெருக்கடி நிலையின் போது ஜனநாயகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.