கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பலனளிக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
‘பாரத் ஜோடோ யாத்ரா’ போன்ற நீண்ட பாத யாத்திரைகள் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் மக்கள் இத்தகைய திட்டங்களை நேர்மையான நோக்கத்துடன் வரவேற்கின்றனர் என்று மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகர் 1983 ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் ராஜ்காட் வரை 4260 கி.மீ. தூரம் பாத யாத்திரை மேற்கொண்ட நிகழ்வையும், 1980 ம் ஆண்டு விவசாயிகளுக்காக ஜல்கோன் முதல் நாக்பூர் வரை தான் மேற்கொண்ட பாதயாத்திரையையும் நினைவுகூர்ந்த சரத்பவார் சீரிய முயற்சியுடன் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நிகழ்வுகளை மக்கள் வெகுவாக வரவேற்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இந்த பாதயாத்திரை காங்கிரஸ் கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் ராகுல் காந்திக்கு நல்ல பலனளிக்கும் என்றும் கூறிய அவர் 2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்த்து நன்கு அறிமுகமான வேட்பாளரை களமிறக்கும் திட்டம் குறித்த கேள்விக்கு இப்போதைக்கு அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறினார்.
நிதிஷ் குமார், மம்தா பானெர்ஜீ தவிர கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்கள் தன்னிடம் தொடர்பில் இருப்பதாக கூறிய அவர் கூட்டணி என்று வரும் போது அவரை சேர்க்க கூடாது இவரை சேர்க்க கூடாது என்ற எண்ணம் இருக்கக் கூடாது என்பது என் கருத்து என்று தெரிவித்தார்.