திருவனந்தபுரம்: பாரத் ஜோடோ பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரைக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளா மாநிலத்தின் நெடுஞ்சாலைகளும், சாலைகளும் மோசமாக இருப்பதால், பாதயாத்திரை செல்பவர்கள் கடும் சிரமப்பப்படுவதால், இன்று ஒரு நாள் ஓய்வு அறிக்கப்பட்டு உள்ளது.

ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. ராகுலுடன் சேர்ந்த 118 பேர் தொடர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவர் நடைபயணம் மேற்கொள்ளும் பகுதிகளில் அந்த பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் ராகுலுடன் இணைந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

7ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்கள் 54 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் கடந்த 11ந்தேதி முதல் கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறது. சுமார் 18 நாட்கள் கேரளாவில் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல், 7வது நாளான நேற்று கொல்லம் பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.

முதல் நிகழ்ச்சியாக பாதயாத்திரை குழு, சிவகிரி மடத்திற்கு சென்றனர். அங்கு ராகுல்காந்தியை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அவர், சமூக சீர்திருத்த வாதியும், துறவியுமான ஸ்ரீநாரயணகுருவுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் நடந்த தீபாராதனையிலும் பங்கேற்றார். அவருடன் காங்கிரஸ் தொண்டர்களும் ஸ்ரீநாராயணகுருவை வழிபட்டனர். தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டனர்.

கேரளாவில் மழையும் பெய்துகொண்டிருப்பதால், நடைபயணம் மேற்கொள்பவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். மேலும், தொடர் நடை பயணத்தால் ராகுல் காந்தியின் காலில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் தான் தொடர்ந்து நடைபயணம் செல்வேன் என ராகுல் கூறியிருந்தார்.

ஆனால், சீதோஷ்ண நிலமை மற்றும் உடல்நிலையை கருத்தில்கொண்டு,   இன்று ஒரு நாள் பாதயாத்திரை குழுவினருக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று ஒரு நாள் இடைவேளை விட்டு நாளை கேரளாவின் கொல்லம் நகரில் இருந்து மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.