ஜெய்ப்பூர்: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய யாத்திரையின்போது, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது  பாரத் ஜோடோ யாத்திரை, கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி  தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.

இன்று 98-வது நாளாக ராகுலின் பாதயாத்திரை  ராஜஸ்தான் மாநிலத்தில்  சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய யாத்திரையில்  ராகுல் காந்தியுடன் ரகுராம் ராஜன் இணைந்தார். ஏற்கனவே ராகுலின்  நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், மாநில தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள்,  அரசியல்வாதிகள், ஆர்வலர்கள், பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் காந்தியுடன் இணைந்துள்ளனர். ஸ்வாரா பாஸ்கர், பூஜா பட், அமோல் பலேகர், ரியா சென், ரஷ்மி தேசாய் மற்றும் சுஷாந்த் சிங் ஆகியோர் பாலிவுட்டில் இருந்து பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்றுள்ளனர். நடிகர் – நடிகைகள் எனப் பல்வேறு தரப்பினர் பங்கேற்று ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை ராஜஸ்தானில் நடைபெற்று வரும் நடைப்பயணத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பங்கேற்று ராகுல் காந்திக்கு ஆதரவளித்துள்ளார்.

ராகுல் காந்தியின் நடைப்பயணம் மொத்தம் 150 நாள்கள் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 100 நாள்களை கடந்து சாதனை படைக்கவுள்ளது. பாரத் ஜோடோ யாத்ராவின் 100 நாட்களைக் குறிக்கும் வகையில், ஜெய்ப்பூரில் வெள்ளிக்கிழமையன்று பாடகி சுனிதி சவுகானின் நேரடி நிகழ்ச்சியுடன் ஒரு கச்சேரியை காங்கிரஸ் நடத்தவுள்ளது. ராகுல் காந்தியின் யாத்திரை  ராஜஸ்தானில் சுமார் 500 கி.மீ தூரத்தை ஜலவர், கோட்டா, பூண்டி, சவாய் மாதோபூர், தௌசா மற்றும் அல்வார் மாவட்டங்களை கடந்து 17 நாட்களுக்குள் கடந்து டிசம்பர் 21 ஆம் தேதி ஹரியானாவில் நுழைகிறது.  இது 150 நாட்களில் 3,570 கிமீ தூரத்தை கடந்து 2023 பிப்ரவரி தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீரில் முடிவடையும்.