ஐதராபாத்: கோவாக்சின் தடுப்பு மருந்துக்கான தேவை, உள்நாட்டில் அதிகரித்திருப்பதால், அதன் உற்பத்தியை, பாரத் பயோடெக் நிறுவனம் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கோவாக்சின் என்பது, இந்திய சுகாதார ஒழுங்குமுறை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளில் ஒன்றாகும். மற்றொரு மருந்து ஆஸ்ட்ராஸெனகா என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாக்சின் தடுப்பு மருந்து, ஐதராபாத்தில் அமைந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தடுப்பு மருந்துக்கான தேவை அதிகரித்துள்ளதால், கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திலுள்ள மாலூர் என்ற இடத்திலும் விரைவில் ஒரு தயாரிப்பு யூனிட்டை அந்நிறுவனம் அமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், ஐதராபாத்தின் தயாரிப்பு யூனிட்டிலும் கூடுதல் உற்பத்தி மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய மாலூர் யூனிட்டில், எதிர்வரும் ஜூலை மாதம் வரை, உற்பத்தி திறன் 5 மடங்கு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய ஐதராபாத் யூனிட்டில், மே மாத வாக்கில், உற்பத்தி நடவடிக்கை இரட்டிப்பாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.