சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை  நாடு முழுவதும பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  தமிழகத்தில் அரசு தனியார் பேருந்துகள், ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அனைத்து அரசு பஸ்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக உயர் அதிகாரி  தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கடந்த 12 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. இதன் காரணமாக, நாளை பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக, பாரத்பந்தில் பங்கேற்பதாக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா, ஆம்ஆத்மி, தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்பட 18 கட்சிகள் அறிவித்துள்ளன. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தப் போவதில்லை என்று கம்யூனிஸ்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழகஅரசு விவசாயிகள் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

தமிழகத்தில் இந்த போராட்டத்தை வெற்றி பெற செய்ய எதிர்க்கட்சிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. ஆனால் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு அனைத்துவித முன்எச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள தமிழகஅரசின் போக்குவரத்துத் துறை உயர்அதிகாரி,  தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்கள் சார்பாக 22 ஆயிரம் அரசு பஸ்கள் வழக்கமாக இயக்கப்படுகிறது.  பொது வேலை நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அனைத்து அரசு பஸ்களும் இயக்கப்படும். தமிழகம் முழுவதும பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள், மாநகர மற்றும் நகர பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் நாளை இயங்கும் என்றும்,  சென்னையில் 3 ஆயிரம் மாநகர பேருந்துகளும் இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும,  அனைத்து போக்குவரத்து கழகத்தில் இருந்தும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் முழுமையாக பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுப்பில் இருக்கும் தொழிலாளர்களையும் பணிக்கு உடனே திரும்புமாறு கிளை மேலாளர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் வழக்கமான நேரத்திற்கு இயக்கப்படும். நீண்ட தூரம் செல்லக்கூடிய விரைவு பஸ்களும் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சேவை அளிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

அதுபோல,  அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறும்போது,  நாளை பகலில் ஆம்னி பஸ் சேவை ரத்து செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு பிறகு எல்லா பகுதிகளுக்கும் ஆம்னி பஸ் சேவை தொடரும் என்றார்.

அதுபோல,  முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றாலும் தமிழகத்தில் ரெயில் போக்குவரத்து தடைபடாது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் வழக்கம் போல் நாளை இயக்கப்படுகிறது. வழக்கமான கால அட்டவணைப்படி ரெயில்கள் புறப்பட்டு செல்லும். மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காரணத்தால் மட்டுமே சேவை ரத்து செய்யப்படும என தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், விவசாயிகளின் பாரத் பந்துக்கு ஆதரவாக , நாளை  தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., மத்திய தொழிற்சங்கம், விடுதலை சிறுத்தை உள்பட தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்திருப்பதால் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொ.மு.ச. தலைவர் சண்முகம் கூறும்போது, “நாளை 50 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக” தெரிவித்துள்ளார்.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மூத்த நிர்வாகியான சவுந்தரராஜன் கூறும்போது, “நாளை பந்த் போராட்டம் காரணமாக மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  முழு அடைப்பை  காரணம் காட்டி பஸ்களை மறிப்பது, கல் வீசி தாக்குவது போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபடக்கூடாது. அதுபோன்ற சம்பவங்களில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.