இந்திய சுதந்திர போராட்டத்தில் மறக்க முடியாத வீரர் பகத் சிங். தனது 24 வயதிலேயே  ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தூக்கிலடப்பட்ட மாவீரன்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் குறிப்பிடத்தக்க  புரட்சியாளர்  பகத்சிங் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார்.

ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்த்ர்.

ஆங்கிலேயேருக்கு எதிராக தனது போராட்டத்தை தீவிரமாக நடத்திய கடுமையான போராளி பகத்சிங். ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின் 110வது பிறந்தநாள் இன்று.

 

‘சாஹீது பகத்சிங்’ என அழைக்கப்படும் ‘பகத்சிங்’ அவர்கள், 1907 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28  ஆம் நாள்,  இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள “பங்கா” என்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.

பகத்சிங்கின் குடும்பம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்ட குடும்பம் என்பதால், இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராக விளங்கினார். லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பகத்சிங் அவர்கள், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார்.

1919 ம் ஆண்டு, இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது.

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டு நாடே கொதித்தது. இந்த கொடூர மான படுகொலை, பகத்சிங்கின் மனதில் பெரும் மாற்றத்தையும் விதைத்ததோடு மட்டுமல்லாமல், இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்துவந்து தன்னுடன் வைத்துக்கொண்டு, அவர் வெள்ளையர்களை விரட்ட சபதமும் பூண்டார்.

தன்னுடைய பதின்மூன்று வயதில், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த பகத்சிங் அவர்கள், 1922 ம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த “சௌரி சௌரா” வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத்சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். ‘அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!’ என முடிவுக்கு வந்தார்.

1924 ம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட “இந்துஸ்தான் குடியரசுக் கழகம்” என்னும் அமைப்பில் இணைந்தார். பிறகு 1926ல் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து “நவ்ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர்.

1928 ம் ஆண்டு, “சைமன் கமிஷனை” எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் போலீஸாரால் தடியடிப்பட்டு இறந்தார்.

இதனால் கோபம்முற்ற பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர்.

அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை கொண்டுவந்தது.

இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் “சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்” குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். 1929 ம் ஆண்டு, ஏப்ரல் 8 ம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட பொழுது, குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.

சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசின் 24வது வயதில் 1931ம் ஆண்டு, மார்ச் 23ம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.

ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட. இன்றைய இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் வாழ்க்கை போற்றத்தக்க ஒன்றாகும். விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட, தன் மரணத்தையே பரிசாகத் தந்த மாபெரும் போராளி. வாழ்வதன் மூலமாக மட்டுமல்லாமல், இறப்பதன் மூலமாகவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்துக் காட்டியவர். அவர் வாழ்ந்த வாழ்க்கை காலம் குறுகியது என்றாலும் நூற்றாண்டுகளைக் கடந்து சுமந்து நிற்கும்.

தன்னலமற்ற வாழ்க்கைக்கு உதாரணம் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக விளங்கியவர் பகத்சிங்.  “தூக்கிலிடும் முன் கடைசி ஆசை என்ன?” என பகத்சிங்கிடம் ஆங்கிலேய ஆட்சி யாளர்கள்  கேட்டார்கள். அதற்கு அவர்,  “பேபி” கையால் ரொட்டி வேண்டும் என்றார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார்.

காரணம் பேபி என்ற பெண் சிறையில் மலம் அள்ளுபவர். ஆனால் பகத்சிங், ‘அவர் தான் ரொட்டி செய்து தர வேண்டும் என உறுதியாய் கூற, பேபி அழைத்து வரப்பட்டார்.

“நான் மலம் அள்ளுபவர், ரொட்டி செய்து தர மாட்டேன்”, எனக் கூறுகிறார். ” என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில் சாப்பிடாமல் இருக்கிறேனா?

ஒரு பிள்ளையின் மலம் அள்ளுபவரே தாய் என்றால், ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள், தாயினும் மேலானவர் என்று சொன்னவர் பகத்சிங்.

அவரது பிறந்த நாளை போற்றுவோம்.