சென்னை: கா்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகள் சென்னையில் ஒரு மாதம் தங்கி யிருந்து திட்டமிட்டு உள்ளனர், அவர் திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தனர் என்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பை நடத்தியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறியிருந்தார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போது என்ஐஏ அமைப்பினர், குற்றவாளிகள் சென்னையில் தங்கியிருந்தனர் என்று கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 1-ந் தேதி பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள பிரபல ஓட்டலபான ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறியதில் 10 பேர் படுகாயம் அடைந்திருந்தார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கூட்டாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் ஓட்டல், அரசு பஸ்களில் மர்மநபர் பயணம் செய்த போது சிக்கிய வீடியோ காட்சிகள் மூலமாக, அவரது உருவப்படங்கள் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மர்மநபர் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி புட்டேஜ்களை கொண்டு விசாரணை நடத்தி வரும், என்.ஐ.ஏ. அதிகாரிகள், தமிழ்நாடு, ஐதராபாத், மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாக பெங்களூரு ஓட்டலில் குண்டுவெடிப்பை நடத்திய மர்மநபர் யார்? என்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.. குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வழிப்பாட்டு தலத்துக்கு செல்லும் அந்த நபா், தான் அணிந்திருந்த தொப்பியை கழற்றி அங்குள்ள குப்பைத் தொட்டியில் வீசியிருப்பது தெரியவந்தது. அதைக் கைப்பற்றி துப்பு துலக்கியதில் பல அதிா்ச்சி தகவல்கள் கிடைத்தன.
இதற்கு முன்பு கர்நாடகத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் அந்த நபருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. ஆன்லைன் மூலமாக வந்த உத்தரவை தொடர்ந்து ஓட்டல் குண்டுவெடிப்பை மர்மநபர் அரங்கேற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுபற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் குண்டு வைத்த நபர் அணிந்திருந்த அந்தத் தொப்பி, சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் உள்ள கடையில் வாங்கியிருப்பது தெரியவந்தது. தொப்பியில் இருந்த தலை முடியை டிஎன்ஏ சோதனைக்கு என்ஐஏ அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், அந்தத் தொப்பியை அணிந்திருந்த நபா், கா்நாடக மாநிலம் ஷிவமோகாவைச் சோ்ந்த முஸாவிா் ஹூசைன் ஷாஜிப் என்பவது தெரிய வந்தது. கா்நாடக மாநிலம் ஷிவமோகாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள்களை சோ்த்ததாக என்ஐஏ கடந்த 2020-ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்கில், முஸாவிா் தேடப்பட்டு வருகிறாா்.
இவர் சென்னை மயிலாப்பூர் பகுதியில் தங்கியிருந்ததும், மயிலாப்பூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட கடையில் நடத்திய விசாரணையிலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததிலும் முஸாவிா் அணிந்திருந்த தொப்பியை அவரது கூட்டாளி அப்துல் மாத்தேன் தாஹா ரூ. 400-க்கு வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடா்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும், ரசீதையும் என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா். இந்த வழக்கில் தேடப்படும் முஸாவிா் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதேபோல, அவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த அப்துல் மாத்தேன் தாஹா என்பவா் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ. 5 லட்சம் பரிசு என்ஐஏ அறிவித்துள்ளது.
குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரடியாக முஸாவிா் ஈடுபட்டுள்ளதை என்ஐஏ அதிகாரிகள் விசாரணையின் மூலம் உறுதி செய்துள்ளனா். அவர்கள் பயன்படுத்திய கைப்பேசி, சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல் ஆகியவற்றை கொண்டு விசாரித்ததில், கடந்த ஜனவரி 2-ஆவது வாரத்தில் இருந்து பிப்ரவரி 2-ஆவது வாரம் வரை இருவரும் மயிலாப்பூர் அருகே திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது. அந்த விடுதியிலும் என்ஐஏ அதிகாரிகள் தகவல்களைச் சேகரித்துள்ளனா்.
ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பின்னா் இருவரும் கேரளம் தப்பி சென்றிப்பதும், பின்னா் அங்கிருந்து தமிழகத்துக்கு வந்து, சில நாள்களிலேயே ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு தப்பியதும் தெரியவந்துள்ளது. நெல்லூரில் இருந்து எங்கு சென்றனா் என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
ஏற்கெனவே இந்த வழக்கில் முகம்மது சபீா் என்பவா் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய எலக்ட்ரானிக் பொருள்கள், வெடிப் பொருள்கள் சென்னையில் வாங்கப்பட்டதா என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.
தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் தான் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவைத்ததாக மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஷோபாவின் பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.