கொல்கத்தா: ராகுல்காந்தியின் பாரத் நியாய் யாத்திரை மேற்குவங்க மாநிலத்தில் நுழைந்துள்ள நிலையில், மே.வங்கம் சிலிகுரியில் ராகுல் காந்தி யாத்திரைக்கு மாநில அரசு  திடீர் தடை விதித்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்து உள்ளது.

இதுகுறித்து கூறிய மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான  ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, யாத்திரையின் ஒரு பகுதியாக மேற்கு வங்க மாநிலத்தில் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி பெறுவதில் தனது கட்சி சிக்கலை எதிர்கொள்கிறது என தெரிவித்துள்ளார். இதை பாஜக கிண்டல் செய்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வீழ்த்த  காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் இணைந்து இண்டி கூட்டணியை அமைத்துள்ளது. ஆனால், இந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இதுவரை 4முறை இணைந்து ஆலோசனை நடத்தியும், பிரதமர் வேட்பாளர் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இறுதியான முடிவு எடுக்க முடியவில்லை.  காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைக்கு நிதிஷ்குமார், மம்தா, கெஜ்ரிவால் போன்றோர் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். இதனால், 28 கட்சிகளை கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த  உருவாக்கப்பட்ட இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள , மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்க முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதுடன், இருப்பினும் ராகுல் காந்தியின் யாத்திரை தொடர்பாக தங்களுக்கு எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. ஆகையால் ராகுல் காந்தியின் யாத்திரையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இணைந்து பங்கேற்காது எனவும் மமதா பானர்ஜி கூறினார்.

இந்த நிலையில், தற்போது,  முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கு  தடை விதித்துள்ளது. மேற்குவங்க மாநிலம்  சிலிகுரியில்  ராகுலின் நியாய் யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

“இந்தியா” கூட்டணியில் இடம் பெற்றுள்ள மமதா பானர்ஜியின் மேற்கு வங்க மாநிலத்திலேயே யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது ராகுல் காந்தியை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முன்னதாக பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அம்மாநில அரசு கடும் நெருக்கடி கொடுத்தது. ராகுல் காந்தி மீது வழக்குகளும் போடப்பட்டுள்ளன. ராகுல் காந்தியை கைது செய்வோம் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மிரட்டலும் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக,  காங்கிரசை அவமானப்படுத்தும் வகையில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு பெங்கால் அனுமதி மறுத்துள்ளது என விமர்சனம் செய்துள்ளது.