சட்டப் பேரவை உறுப்பினராக (எம்எல்ஏ) தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிமை அடிப்படை உரிமை அல்ல என்றும், அத்தகைய உரிமையை மீறுவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக வழக்குத் தொடர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சமீபத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கட்சி மாறி வாக்களித்ததற்காக சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்தார். தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
அரசியலமைப்பின் 32வது பிரிவின் கீழ், அரசியலமைப்பின் மூன்றாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் ஏதேனும் மீறப்பட்டால் மட்டுமே, உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக மனு தாக்கல் செய்ய முடியும்.
மனுதாரர்கள் ஏன் முதலில் உயர் நீதிமன்றத்தை நாடவில்லை என்றும், இந்த விஷயத்தில் என்ன அடிப்படை உரிமை மீறல் உள்ளது என்றும் நீதிபதி கண்ணா கேள்வி எழுப்பினார்.
“அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,” என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
“அது அடிப்படை உரிமை அல்ல” என்று நீதிபதி கன்னா கூறினார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கறிஞர், அவர்கள் ஒரே இரவில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக வலியுறுத்தினார், அதற்கு எம்.எல்.ஏ.வாக இருப்பது அடிப்படை உரிமை கிடையாது என்று பதிலளித்த பெஞ்ச் இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.