ஹரித்வார்
நாளை முதல் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா தொடங்க உள்ள போது இங்கு ஒரு ஆசிரமத்தில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான புண்ணிய தலமான ஹரித்வார் அமைந்துள்ளது. இங்கு கங்கை நதி முதல் முதலாகச் சமவெளிப் பகுதியில் இறங்குகிறது. இங்குச் சாதாரணமாகவே ஏராளமானோர் வருகை புரிவது வழக்கமாகும். இந்நிலையில் நாளை முதல் கும்பமேளா தொடங்குகிறது.
வரும் ஏப்ரல் 30 வரை நடைபெறும் இந்த கும்பமேளாவில் கலந்துக் கொள்ள லட்சக்கணக்கானோர் வருவது வழக்கமாகும். இதையொட்டி உத்தரகாண்ட் அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஹரித்வாருக்குள் வரும் அனைவரும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மேலும் நகரின் ஒவ்வொரு வாயிலிலும் தீவிர பரிசோதனை நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் லட்சக்கணக்கான முகக் கவசங்களை இலவசமாக வழங்கவும் சானிடைசர் விநியோகம் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இத்தனைக்கும் இடையே இங்குள்ள ஆசிரமம் ஒன்றில் 32 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆசிரமம் உள்ள பகுதியில் தீவிர கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.