டில்லி

நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் நாடு ஆபத்தை எதிர்நோக்கி உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.   நேற்று வரை இந்தியாவில் 1.21 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு அதில் 1.62 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.   நேற்று வரை 1.14 கோடி பேர் குணம் அடைந்து 5.49 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

டில்லியில் நேற்று மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் மற்றும் நிதி அயோக் உறுப்பினர் விகே பால் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றைக் கூட்டாக நிகழ்த்தினர்.

அப்போது ராஜேஷ் பூஷன்  மற்றும் விகே பால், “இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாவட்டங்களில் 8 மகாராஷ்டிராவில் உள்ளன. இதைத்தவிர டெல்லி, பெங்களூருவில் பாதிப்பு அதிகமுள்ளது,   தற்போது கொரோனா பாதிப்பு ‘மோசம்’ என்ற நிலையில் இருந்து ‘மிகவும் மோசம்’ என்ற நிலையை எட்டியிருக்கிறது.  எந்த ஒரு மாநிலமும், மாவட்டமும், எந்த பகுதியும், உண்மையான ஆபத்தை அறியாமல், சுய திருப்தி அடையக் கூடாது.

நாடு முழுவதும் தற்போது ஆபத்தில் உள்ளது. ஆகவே, பரவலைக் கட்டுப்படுத்தி, உயிர்களைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். பாதிப்புகள் இன்னும் அதிகரித்தால் நாட்டின் சுகாதார அமைப்பே திணறிவிடும்.  ஆகவே மருத்துவமனைகள், தீவிர சிகிச்சை ஏற்பாடுகளுடன் முழுமையான தயார் நிலையில் இருக்க வேண்டும்,’’ எனத் தெரிவித்துள்ளனர்.