கத்தார்: உலகக் கோப்பை கால்பந்து, நடைபெறும் எட்டு மைதானங்களில் ஆல்கஹால் கலந்த பீர் விற்பனைக்கு அனுமதி கிடையாது என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்து உள்ளனர். இதையடுத்து, ரசிகர் ஒருவர் திருட்டுத்தனமாக மைதானத்திற்குள் பீரை கடத்தியுள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்க்கும், 22வது உலகக் கோப்பை காலபந்த தொடர் நடப்பாண்டு கத்தாரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. போட்டி தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், கால்பந்து போட்டிகள் நடைபெறும் 8 மைதானங்களிலும் ஆல்கஹால் கலந்த பீர் விற்பனைக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள கால்பந்து ரசிகர்கள், கத்தார் அரசின் முடிவு கவலை அளிப்பதாகவும், பீர் மறுக்கப்பட்டால் ஆட்டத்தை கொண்டாட்டமாக பார்ப்பதை மிஸ் செய்வோம் எனவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் திருட்டுத்தனமாக மைதானத்திற்குள் பீரை கடத்தியுள்ளார். பீர் டின்னுக்கு வெளியே கொக்கோகோலா ஸ்டிக்கரை ஒட்டி, அதை கொக்கோகோலா என்று கூறி பீரை உள்ளே எடுத்துச்சென்றுள்ளார். அவரது இந்த செயல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், ஷாம்பெயின், ஒயின், விஸ்கி உள்பட பிற மதுபானங்கள் மைதானங்களின் விருந்தோம்பல் பகுதிகளில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இடங்களுக்கு வெளியே, சாதாரண டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு பீர் மட்டுமே விற்கப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.