விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டி தொடரில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 277 ரன்கள் அடித்தார்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 38 அணிகள் பங்கு பெரும் இந்த முதல்தர கிரிக்கெட் (List A – லிஸ்ட் ஏ)போட்டியில் தமிழ்நாடு – அருணாச்சல் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

முதலில் ஆடிய தமிழ்நாடு 50 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய அருணாச்சல் 28.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 71 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தப் போட்டியில் 141 பந்துகளில் 277 ரன்கள் அடித்த தமிழக வீரர் ஜெகதீசன் லிஸ்ட் ஏ போட்டிகளில் பல்வேறு உலக சாதனைகளை தகர்த்துள்ளார். அதன் விவரம் :

லிஸ்ட் ஏ ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை அதிகபட்ச ரன்கள் அடித்தவர் என்ற பெருமையை பெற்ற அலிஸ்டர் பிரௌன் சாதனையை முறியடித்தார். இவர் 2002 ம் ஆண்டு கிளாமோர்கன் அணிக்காக 268 ரன்கள் அடித்ததே உலக சாதனையாக இருந்தது.

தவிர பெண்கள் முதல்தர போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீபலி வீரக்கொடியின் சாதனையான 271 ரன்களையும் முறியடித்தார்.

முதல் தர போட்டிகளில் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் ஜெகதீசன் ஏற்படுத்தினார். இந்த தொடரில் இது வரை தொடர்ச்சியாக ஐந்து போட்டியில் சதம் அடித்துள்ளார்.

இதற்கு முன் குமார் சங்கக்கார (2014-15ல்), அல்விரோ பீட்டர்சன் (2015-16ல்) மற்றும் தேவ்தத் படிக்கல் (2020-21ல்) ஆகியோர் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக சதமடித்துள்ளனர்.

141 பந்துகளில் 277 ரன்கள் எடுத்த ஜெகதீசனின் சராசரி ஸ்ட்ரைக் ரேட் 196.5 ரன்கள் இதற்கு முன் குயின்ஸ்லாந்து அணிக்கு எதிராக ட்ராவிஸ் ஹெட்-ன் 181.1 என்ற ஸ்ட்ரைக் ரேட் சாதனையாக இருந்தது அந்தப் போட்டியில் அவர் 127 பந்துகளில் 230 ரன்கள் எடுத்திருந்தார்.

114 பந்துகளில் இரட்டை சதத்தை அடித்த ஜெகதீசன் இந்த சாதனையை ட்ராவிஸ் ஹெட்-டுடன் பகிர்ந்துகொள்கிறார். கடந்த ஆண்டு மார்ஷ் கோப்பை போட்டியில் 114 பந்துகளில் இரட்டை சதத்தை ட்ராவிஸ் ஹெட் எட்டினார்.

506/2 என்ற தமிழ்நாடு அணியின் இன்றைய ஸ்கோர் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் வேறு எந்த அணியும் அடிக்காத அதிகபட்ச ஸ்கோராக மாறியுள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி எடுத்த 498/4 என்பதே இதுவரை அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

சாய் சுதர்ஷனுடன் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் சேர்த்து முதல்முறையாக 400 ரன்களை சேர்த்த ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்கு முன் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜிம்பாப்வே அணிக்காக கிரிஸ் கைல்ஸ் – மார்லன் சாமுவேல்ஸ் ஜோடி எடுத்த 372 ரன்களே அதிகபட்ச ரன்களாக இருந்தது.

அருணாச்சல பிரதேச அணியின் சேத்தன் ஆனந்த் 10 ஓவர் வீசி 114 ரன்கள் கொடுத்தார் இதில் 88 ரன்களை ஜெகதீசன் எடுத்தார் இதுவரை லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் வேறு எந்த பௌலரும் இவ்வளவு அதிக ரன்கள் கொடுத்ததில்லை.

விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் விராட் கோலி, தேவ்தூத் படிக்கல், ப்ரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் ஒரே ஆண்டில் 4 சதம் மட்டுமே அடித்துள்ள நிலையில் இந்த ஆண்டு ஜெகதீசன் இதுவரை ஐந்து சதங்களை அடித்து பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பையில் இதுவரை இல்லாத அளவுக்கு 15 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.

2020 – 21 ம் ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் 827 ரன்கள் அடித்த ப்ரித்வி ஷா-வைத் தொடர்ந்து இதுவரை இந்த ஆண்டுக்கான தொடரில் 799 ரன்கள் அடித்து விஜய் ஹசாரே தொடரில் அதிக ரன்கள் அடித்த இரண்டாம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஜெகதீசன்.

அருணாச்சல் அணியை 435 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தமிழ்நாடு அணி ஆண்கள் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இதற்கு முன் 1990 ம் ஆண்டு டேவன் அணிக்கு எதிராக சோமர்செட் அணி 346 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது.

விஜய் ஹசாரே தொடர்: தொடர்ந்து 5 போட்டிகளில் சதமடித்து தமிழக வீரர் ஜெகதீசன் சாதனை