சென்னை: தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த பீலா ராஜேஸ் காலமானார். அவருக்கு வயது 55.

கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் டாக்டர் பீலா ராஜேஸ். இவரது கணவர் ராஜேஸ் ஐபிஎஸ். தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
பின்னர் பீலா ராஜேஸ் சுகாதாரத்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டனார். தற்போது எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில், அவருக்கு கேன்சன் நோய் இருப்பது உறுதியானது. இதையடுத்து புற்றுநோய்க்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பீலா வெங்கடேசன் இன்று இரவு உயிரிழந்தார்.
பீலா வெங்கடேசனின் தந்தை எல்.என்.வெங்கடேசன் தமிழக காவல்துறையில் டி.ஜி.பி.யாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் பீலா ராஜேஸ் (55), ஐ.ஏ.எஸ். மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பீலா 1997ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஆனார். முதலில் இவருக்கு பீகார் மாநில கேடர் ஒதுக்கப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரியான கணவர் தமிழகத்தில் பணிபுரிவதை மேற்கோள்காட்டி, 2000-ம் ஆண்டு தமிழகத்துக்கு தன் பணியிடத்தை தற்காலிகமாக மாற்றிக்கொண்டார். பின்னர், 2003-ம் ஆண்டு பீகாரிலிருந்து பிரிந்து புதிதாக உதயமான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். பின் மத்தியஅரசின் பணிக்குச் சென்றவர், இந்திய ஹோமியோபதி மருத்துவம், மத்திய ஜவுளித்துறைகளில் பணியாற்றினார். நீண்ட போராட்டத்துக்குப் பின், மீண்டும் தமிழகம் கேடர், இவருக்குக் கிடைத்தது.
தமிழகத்தில் செங்கல்பட்டு துணை கலெக்டர், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர், மீன்வளத்துறை இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், சுகாதாரத்துறை செயலாளராக, 2019 பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார். 2020ம் ஆண்டு வணிக வரித்துறைக்கு மாற்றப்பட்டார். இதன் பிறகு, தற்போது கடைசியாக எரிசக்திதுறை முதன்மை செயலாளராக பணியாற்றினார்.
பீலா வெங்கடேசன் திருமணத்துக்கு பிறகு பீலா ராஜேஷ் என அவர் அழைக்கப்பட்டார். ஆனால், முன்னாள் டிஜிபியான ராஜேஷ்தாஸ் பாலியல் புகாரில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், தனது கணவரை விவாகரத்து செய்தவர் தனது பெயரை பீலா வெங்கடேசன் என மீண்டும் மாற்றிக் கொண்டார்.