சென்னை,
மத்தியஅரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள மாட்டுக்கறி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐஐடியில் மாணவர்களின் ஒரு பிரிவினர் மாட்டுக்கறி விருந்து நடத்தினர்.
அதையடுத்து, விருந்தை ஏற்பாடு செய்த மாணவன், மற்றொரு பிரிவு மாணவரால் தாக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது.
இந்த சம்பவம் குறித்து கோட்டூபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஐ.ஐ.டி. மாணவர்கள் அர்ஜூன் ஜெயக்குமார், சாமிநாதன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் கூட்டாக மனு தாக்கல் செய்தனர்.
அதில், ‘சூரஜ் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சரியான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை. மாணவன் மணீஸ் மீது சாதாரண சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை கோட்டூர்புரம் போலீசார் விசாரித்தால், நியாயமாக இருக்காது. எனவே, துணை கமிஷனர் பதவிக்கு குறையாத போலீஸ் அதிகாரிகளை கொண்டு, இந்த வழக்கை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஆர். மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ஜான் சத்தியன் ஆஜராகி, மணீஸ் மீது ஏற்கனவே ஏராளமான மாணவர்கள் ஐ.ஐ.டி. நிர்வாகத்துக்கு புகார் செய்துள்ளனர்.
அவர் மாற்றுக் கருத்துக்களை கொண்டவர்களை தாக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக சூரஜை கொடூரமாக தாக்கியுள்ளார். தற்போது சூரஜ் முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
எனவே, ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதி ஆர்.மகாதேவன், மாணவர்களின் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்த மனுவுக்கு போலீசாரின் கருத்தை கேட்டு அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை 12-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
கத்தில் மாட்டுக்கறி விருந்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மாணவர்களின் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மாட்டுக்கறி விருந்தில் மோதல்: ஐ.ஐ.டி. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை: