திருவனந்தபுரம்,

சென்னையில் ஐஐடி மாணவர் சூரஜ் மீது தாக்குதல் நடத்தியதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று முன்தினம் சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் அமைதியான வழியில் நடைபெற்றது.

இந்த  மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியவர் மாணவர் சூரஜ் என்பவர்.

இதந்நிலையில் நேற்று மதியம்  ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் மதிய உணவு சாப்பிட சென்றபோது, மற்றொரு பிரிவு மாணவரால்  சூரஜ் தாக்கப்பட்டார். இது ஐஐடி மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, கோட்டூர்புரம் போலீசார் மாணவர் சூரஜ்ஜிடம் விசாரணை நடத்தியதுடன், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இன்று ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சூரஜ் மீதான தாக்குதலுக்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாணவர் சூரஜ் மீதான தாக்குதல் சகிப்பின்மையை வெளிப்படுத்துவதாக கூறியுள்ள பினராய் விஜயன், உணவை தேர்வு செய்துகொள்ளும் உரிமையை அரசியல் சாசனம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.